இந்திய அணியின் முன்னாள் வீரரான டேவிட் ஜான்சன் தனது வீட்டின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்திய முன்னாள் வீரரான டேவிட் ஜான்சன் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் சக வீரரும் ஆவார். அவரது இறப்பிற்கான அதிகாரப்பூர்வ காரணங்கள் எதுவும் தெரியவில்லை.
52 வயதான டேவிட் ஜான்சன் அக்டோபர் 16, 1971ஆம் ஆண்டில் பிறந்தவர். இவர் இந்திய அணிக்காக குறுகிய காலமே விளையாடினாலும், இவரது சிறப்பான பந்துவீச்சின் காரணமாக அனைவராலும் அறியப்பட்ட வீரராக இருந்தார். ஜான்சன் இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடினாலும் 1996ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.
அவருக்கு சிறப்பான தொடக்கம் மற்றும் தரமான பந்துவீச்சு ஆகியவை இருந்த போதிலும், அவரது நிலையற்ற பங்களிப்பு மற்றும் காயங்களுடன் போராட வேண்டியிருந்ததால் தொடர்ச்சியாக சர்வதேச வாய்ப்புகளை பெற முடியவில்லை. இருப்பினும் ஜான்சன் கர்நாடகாவில் நிறைய உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார். அது மட்டுமல்லாமல் வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு திறமையான பயிற்சியையும் அளித்தார்.
ஜான்சன் மொத்தமாக 39 முதல் தர போட்டிகளில் விளையாடி 125 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். இதில் நான்கு முறை ஐந்து விக்கெட்டுகளும் ஒரு முறை 10 விக்கெட்டுகளும் அடங்கும். இந்த நிலையில் தற்போது 52 வயதான ஜான்சன், பெங்களூருவில் உள்ள எஸ்எல்வி பேரடைஸ் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த அவர் திடீரென இன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜான்சன் நீண்ட கால மன அழுத்தத்தில் இருந்ததால் அவர் இந்த முடிவை மேற்கொண்டு இருக்கலாம் எனவும் கிரிக்கெட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இது குறித்த தகவல் அறிந்து வந்த கொத்தனூர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரான ஜெய்ஷா விட்டர் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் “எங்கள் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் டேவிட் ஜான்சனின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். விளையாட்டில் அவர் செய்த பங்களிப்புகள் எப்போதும் நினைவு கூறப்படும்” என்று பதிவிட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க:இவர் ஒருவருக்கு பந்து வீசுவது மிகவும் கடினம்.. எப்போதும் உங்களை அழுத்தத்திலேயே வைத்திருப்பார்.. ரஷீத் கான் பேட்டி
டேவிட் ஜான்சன் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட்டின் சக வீரர் ஆவார். மன அழுத்தத்தால் ஒரு கிரிக்கெட் வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. டேவிட் ஜான்சனின் மறைவிற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

