இந்திய கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பை தொடரில் நாளை கனடா அணியை அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் சந்திக்க உள்ளது.
இதற்கு முன்னர் நடைபெற்ற மூன்று போட்டியிலும் வரிசையாக வெற்றி பெற்று தற்போது நான்காவது வெற்றிக்காக காத்திருக்கிறது. இந்த போட்டிகளில் பந்துவீச்சில் மிக முக்கிய பங்கு வகித்தவர் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா. இவர் குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
கடந்த டி20 உலக கோப்பையில் காயம் காரணமாக பங்கேற்காத பும்ரா, காயம் குணமாகி வந்தாலும் அவரால் பழையபடி பந்து வீச முடியுமா? என்ற கேள்வி எழுந்தது. கிட்டத்தட்ட ஒரு வருடம் காயம் குணமாக ஓய்விலேயே இருந்தார். அதற்குப் பிறகு இந்திய அணியில் இடம் பிடித்த பும்ரா, அயர்லாந்து அணிக்கு எதிரான சர்வதேச தொடரில் கேப்டனாக பொறுப்பேற்றார். முன்பை விட இல்லாத வகையில் தற்போது பந்துவீச்சில் வேரியேஷன்களும், துல்லியமும் கொண்டு சிறப்பான முறையில் வீசி வருகிறார்.
கடந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக மிகச் சிறப்பாக செயல்பட்ட பும்ரா, தற்போது அதே பந்துவீச்சு ஃபார்மை இந்திய அணிக்காகவும் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இவர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக வீழ்த்திய மூன்று விக்கெட்டுகள் இன்று வரை இன்னும் பேசப்படுகிறது. இந்த நிலையில் பும்ராவை மெக்ராத், மலிங்கா உள்ளிட்டோர் வரிசையில் பார்ப்பதாகவும், இப்படி ஒரு வேகப்பந்துவீச்சாளர் இந்திய அணிக்கு கிடைப்பார் என்று கனவிலும் கூட நினைத்ததில்லை என்றும் ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.
இது குறித்து ரவி சாஸ்திரி விரிவாக கூறும்பொழுது
“பும்ரா வருவதற்கு முன்னர் உலக கிரிக்கெட்டை ஆதிக்கம் செலுத்தும் பவுலரை இந்திய அணி கொண்டிருக்கவில்லை. ஒயிட் பால் கிரிக்கெட்டை ஒரு இந்திய பந்துவீச்சாளர் ஆதிக்கம் செலுத்துவார் என்று நான் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை. டெஸ்ட் போட்டிகளிலும் பம்ரா மிரட்டிக் கொண்டிருக்கிறார். ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இவரது ஆதிக்கம் குறித்து சொல்ல வேண்டியதில்லை. எதிரணி பேட்ஸ்மேன்கள் பும்ராவின் பந்துவீச்சை அடித்து ஆடுவது என்பது அரிதான விஷயம்.
இதையும் படிங்க:என்ன பிட்ச் இது.. ரஞ்சி டிராபி விளையாடுற மாதிரி இருக்கு.. சிவம் தூபே ஆதங்கம்
பேட்ஸ்மேன்களை எப்படி வீழ்த்த வேண்டும் என்ற யுத்தியை பும்ரா அறிந்திருக்கிறார். மாடர்ன் டே கிரிக்கெட் பொருத்தவரை தற்போது சிறந்த வேகப் பந்துவீச்சாளர் இவர் மட்டுமே. சர்வதேச கிரிக்கெட்டில் மலிங்கா, மெக்ராத் ஆகியோரின் தாக்கத்தை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். தற்போது அந்த வரிசையில் தான் பும்ராவையும் பார்க்கிறேன்” என்று கூறியிருக்கிறார். இந்திய அணி அடுத்து வருகிற சூப்பர் 8 சுற்றில் முன்னணி அணிகளுடன் மோத உள்ளதால் பும்ரா துருப்புச் சீட்டாக விளங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

