ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த சீசனை பிளே ஆப் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியுடன் முடித்திருக்கிறது. இந்த தோல்விக்கு பிறகு ஆர்சிபி வீரரான விராட் கோலி சில உணர்ச்சிமிகு கருத்துக்களையும், தனது நன்றியையும் ரசிகர்களுக்கு தெரிவித்து இருக்கிறார்.
இந்த சீசனின் தொடக்கத்தில் முதல் பாதி பெங்களூர் அணிக்கு மிகவும் சுமாராகவே அமைந்தது. ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று ஏழு போட்டிகளில் தோல்வி அடைந்து இரண்டாவது பாதியை ஆரம்பித்தது. அதற்குப் பிறகு தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று கம்பீரமாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
அதுவும் தங்களது கடைசி லீக் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மிகவும் முக்கிய ஒன்றாக அமைந்தது. இந்த சீசனை பொருத்தவரை ஆசிபி ரசிகர்களுக்கு மிகவும் மறக்க முடியாத சீசன் ஆகும். தோல்வியின் விளிம்பிலிருந்து அதன் பிறகு மீண்டு வந்து ஆறு வெற்றிகளை பெறுவது எல்லாம் ஆர்சிபி அணியின் விடாமுயற்சியையும், தன்னம்பிக்கையும் வெளிக்காட்டியது.
இந்த சீசனில் வழக்கம் போல விராட் கோலி தன்னால் முடிந்த அளவு பங்களிப்பை ஆர்சிபி அணிக்காக கொடுத்திருக்கிறார். இந்த சீசனில் 741 ரன்கள் குவித்தவர் ஒரு சதமும் நான்கு அரை சதமும் விளாசி இருக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்விக்கு பிறகு பேசிய விராட் கோலி முதல் பாதி தங்களுக்கு சரியாக அமையவில்லை என்றும், இரண்டாவது பாதியில் ரசிகர்களுக்காகவும் தங்கள் சுயமரியாதைக்காகவும் விளையாடியதாக குறிப்பிட்டு இருக்கிறார்.
இது குறித்து விராட் கோலி விரிவாக கூறும்பொழுது
“இந்தத் தொடரின் முதல் பாதியில் எங்கள் செயல்திறன் அவ்வளவு நன்றாக இல்லை. நாங்கள் கிரிக்கெட் வீரர்களாக எங்களது தரத்திற்கு ஏற்ப விளையாடவில்லை. ஆனால் இரண்டாவது பாதியில் எங்கள் திறமையை வெளிப்படுத்தி விளையாட ஆரம்பித்தோம். சுயமரியாதைக்காக ஒவ்வொரு போட்டியையும் வெல்ல விரும்பினோம். இதனால் எங்களுக்கான நம்பிக்கை மீண்டும் வந்தது.
தோல்வியிலிருந்து மீண்டு வந்து நாங்கள் சில விஷயங்களை மாற்றி அமைத்து மீண்டும் வெற்றி பெற்ற விதம் மகிழ்ச்சி அளித்தது. இதை நான் மிகவும் நேசித்ததால் இந்த நினைவு எப்போதும் எனக்குள் இருக்கும். ஒவ்வொரு வீரர்களின் கேரக்டர்களும் இதன் மூலம் வெளிப்பட்டது. நாங்கள் விளையாடிய விதம் அற்புதமான ஒன்றாக இருந்தது.
இதையும் படிங்க:ஓவரா ஆடினால் இப்படித்தான் முடியும்.. ப்ளே ஆஃப் போனதுக்கா இந்த ஆட்டம்.? ஆர்சிபியை சரமாரியாக விளாசும் ஸ்ரீகாந்த்
இந்த தொடரில் பெங்களூரு ரசிகர்கள் ஆதரவு அசைக்க முடியாத ஒன்று. அவர்கள் சின்னச்சாமி மைதானத்தில் மட்டுமின்றி அனைத்து மைதானங்களிலும் வந்து எங்களுக்கான ஆதரவை வெளிப்படுத்தினார்கள். உங்கள் ஆதரவுக்கும், வாழ்த்துக்கும் மிக மிக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று விராட் கோலி கூறி இருக்கிறார்.

