ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இனி வருகிற முக்கியமான போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் களத்தில் மோத உள்ளன. ஏற்கனவே மூன்று அணிகள் ஏறக்குறைய பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் நான்காவது இடத்திற்கு மொத்தமாக நான்கு அணிகள் போட்டி போடுகின்றன.
இதில் டெல்லி மற்றும் லக்னோ அணிகளின் ரன் ரேட் குறைவாக இருப்பதால் வருகிற சனிக்கிழமை நடக்க இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையேயான போட்டியில் வெற்றி பெறும் அணியே அதிகபட்சமாக நான்காவது அணியாக செல்ல அதிக வாய்ப்புள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்த வரை இதுவரை 13 போட்டிகள் விளையாடி ஏழு போட்டிகளில் வெற்றியும், ஆறு போட்டிகளில் தோல்வியும் தழுவி தற்போது புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. பெங்களூர் அணி ஆறு வெற்றிகளுடன் தற்போது ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறது.
இரு அணிகளின் ரன் ரேட்டும் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் வெற்றி பெறும் அணி நான்காவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். இந்த நிலையில் பெங்களூர் அணி உடன் ஒப்பிட்டு பார்க்கும்போது சென்னை அணி சற்று வலு குறைவாகவே காணப்படுகிறது. பெங்களூர் அணி தொடர்ச்சியாக தற்போது ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் வலுவாக உள்ளது.
இந்த நிலையில் வலுவான பெங்களூர் அணியை வலு குறைந்த சென்னை அணி சமாளிக்குமா? என்பதே அனைத்து ரசிகர்களின் கேள்வியாகவும் உள்ளது. இது குறித்து சென்னை அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு கூறும் பொழுது
“நம் நாட்டில் உள்ள அனைவருமே வருகிற 18-ஆம் தேதி சென்னை மற்றும் பெங்களூர் அணியின் போட்டியை காண மிகுந்த ஆர்வமாக இருக்கிறார்கள். நானும் இதற்கு விதிவிலக்கு அல்ல. நானும் இப்போட்டியை காண ஆவலாக இருக்கிறேன்.
புதிய கேப்டன் ருத்ராஜ் தலைமையில் எதிரணிக்கு சவால் கொடுப்பதை பார்க்க நான் ஆவலுடன் இருக்கிறேன். இக்கட்டான சூழ்நிலைகளில் எம் எஸ் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எவ்வாறு சிறப்பாக செயல்படுமோ, இந்த முறை ருத்ராஜின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியின் உதவி இல்லாமல் எப்படி சமாளிக்கப் போகிறது என்பதை காண வேண்டும்.
தற்போது பெங்களூர் அணி மிகவும் வலுவாக இருக்கிறது. வெற்றிக்கான ஆவலுடன் அவர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்பதால் இந்த போட்டியில் சுவாரசியத்திற்கு பஞ்சம் இருக்காது” என்று கூறி இருக்கிறார். இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை அணி பெங்களூர் அணி வீழ்த்தி தனது முதல் வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

