கௌஹாத்தி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் தொடர் தோல்விகளுக்கு பஞ்சாப் அணி முற்றுப்புள்ளி வைத்து தனது ஐந்தாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றிக்கான முக்கிய காரணம் குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் ஷாம் கரண் பேசி இருக்கிறார்.
டாஸ் இழந்த பஞ்சாப் அணி முதலில் பந்து வீசியது. மைதானம் பேட்டிங்கு சாதகமாக இருந்த போதிலும் பஞ்சாப் அணியின் அபார பந்துவீச்சினால் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த தடுமாறினார். இருப்பினும் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் ரியான் பராக் மட்டும் சிறப்பாக விளையாடி 34 பந்துகளில் 48 ரன்கள் குவித்து ஆறுதல் அளித்தார்.
இதனால் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 144 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணிதரப்பில் ஷாம் கரண், ராகுல் சகார் மற்றும் அர்சல் பட்டேல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். பின்னர் வெற்றி இலக்கை நோக்கி பஞ்சாப் அணி களம் இறங்கியது. பஞ்சாப் அணியின் தொடக்க விக்கெட்டுகள் விரைவிலேயே ஆட்டமிழந்து வெளியேறினாலும் கேப்டன் ஷாம் கரண் அணியின் சூழ்நிலையை உணர்ந்து சிறப்பாக விளையாடினார்.
41 பந்துகளை எதிர்கொண்ட சாம் கரண் 5 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் விளாசி 63 ரன்கள் குவித்து பஞ்சாப் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இதன் மூலம் பஞ்சாப் அணி தனது ஐந்தாவது வெற்றியை பதிவு செய்து தற்போது புள்ளி பட்டியலில் ஒரு இடம் முன்னேறி ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது.
இந்த வெற்றிக்குப் பின்னர் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷாம் கரண் கூறும் பொழுது
“ஒரு குழுவாக எங்களது பந்துவீச்சு அபாரமாக இருந்தது. இந்த போட்டியில் நாதன் எல்லிஸ் அபாரமாக பந்து வீசினார். அவர் இந்த சீசனின் தொடக்கத்தில் இருந்தே விளையாடி இருக்க வேண்டும். இரண்டாவது பேட்டிங் செய்ய நான் களத்திற்குள் வந்த போது ஜானி ஆடுகளம் கடினமாக இருந்ததை என்னிடம் கூறினார். ஆடுகளம் கொஞ்சம் கடினமாக இருந்ததால் அதிக ரஸ்க் எடுக்க வேண்டாம் என்று நினைத்தோம்.
இருப்பினும் முக்கியமான கட்டத்தில் வெற்றிக்கு இரண்டு சிக்சர்கள் போட்டியை எங்கள் பக்கம் கொண்டு வந்தது. நானும் ஜானி பேர்ஸ்டோவும் நாளை கிளம்புகிறோம். இந்த சீசன் ஒட்டு மொத்தமாக மகிழ்ச்சி அளிக்கிறது. கேப்டனாக நல்ல மகிழ்வை எனக்கு கொடுத்தது. அணியில் நேர்மறையான சூழ்நிலை நிலவுவது மிகவும் மகிழ்வாக உள்ளது. உலகக் கோப்பையை நினைத்து ஆர்வமாக இருக்கிறேன்.
இதையும் படிங்க:தோல்வியை அமைதியாக ஏற்றுக்கொண்டு எங்கு தவறு செய்தோம் என்பதை கண்டறிய வேண்டும்.. தோல்விக்கு பின்னர் சஞ்சு சாம்சன் பேட்டி
நாங்கள் இந்த சீசனில் நெருங்கி வந்து பல வெற்றிகளை கோட்டை விட்டோம். எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பது யாருக்குத் தெரியும். ஆனால் எங்களது அணியில் நேர்மறையான விஷயங்கள் நிறைய உள்ளன. சசாங்க் சிங் பஞ்சாப் அணிக்குள் வந்தது அற்புதமான விஷயம். அசுதோஸ் சர்மாவும் மிகச் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். இந்த சீசனில் ஹர்சல் பட்டேல் மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர்” என்று கூறியிருக்கிறார்.

