சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான 61வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. ஜெய்ஸ்வாலின் பலவீனத்தைக் கணித்து துல்லியமாக அவரை காலி செய்து இருக்கிறார் சிஎஸ்கே வீரர் சிமர்ஜித் சிங்.
சென்னை அணியின் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் ராஜஸ்தான் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்த சூழ்நிலையில் மகேந்திர சிங் தோனிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடும் கடைசி போட்டியாக இருக்குமா? என்ற சந்தேகமும் நிலவி வருகிறது.
சிஎஸ்கே அணியில் ஒரு மாற்றமாக சான்ட்னர் இந்த போட்டியில் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தீக்ஷானா வாய்ப்பு பெற்றார். பவர் பிளேவில் எப்போதுமே அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய ராஜஸ்தான் அணி, சென்னை அணியின் சிறப்பான பந்துவீச்சுக்கு எதிராக நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக முதல் இரண்டு ஓவர்களில் எந்த பவுண்டரியும் வரவில்லை.
முதல் இரண்டு ஓவரையும் சேர்த்து வெறும் ஏழு ரன்கள் மட்டுமே குவிக்கப்பட்டது. இதன்படி ஆறு ஓவர்கள் பவர் பிளேவில் வெறும் 42 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன்படி பவர் பிளேவிற்கு பிறகு பஞ்சாப் வீரரான சிமர் ஜித் சிங் பந்து வீச வந்தார். ஜெய்ஸ்வாலுக்கு இந்த ஐபிஎல் தொடரில் உடம்பை நோக்கி வீசப்படும் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு எதிராக அவருக்கு பலவீனம் இருந்து வந்தது. உடம்பை நோக்கி வீசப்படும் பந்துகளை நிறைய முறை அடிக்க போய் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார்.
இதை வர்ணனையாளர் ஸ்ரீகாந்தும் வெளிப்படுத்த, சரியாக ஆறாவது ஓவரின் இரண்டாவது பந்தை அதே லைன் அண்ட் லென்த்தில் சரியாக வீச ஃபுல் ஷாட் அடிக்க சென்று கேப்டன் ருத்ராஜிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 21 பந்துகளில் 24 ரன்கள் குவித்த நிலையில் மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் உடன் ஜெய்ஸ்வால் வெளியேறினார். அதற்குப் பிறகு பட்லரும் எட்டாவது ஓவரின் முதல் பந்தில் சிமர்ஜித் சிங் ஓவரின் முதல் பந்திலையே அவரும் ஆட்டமிருந்து வெளியேறினார்.
25 பந்துகளை எதிர்கொண்ட பட்லர் 21 ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார். தற்போது வரை ராஜஸ்தான் அணி 9 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. தற்போது ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் ஆகியோர் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
இந்தப் போட்டி தொடங்கப்படுவதற்கு முன்பாக ரசிகர்களுக்கு ஒரு செய்தியை சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்தது. அதாவது போட்டி முடிந்த பின்னர் யாரும் மைதானத்தை விட்டு வெளியே செல்ல வேண்டாம் சிறிது நேரம் அமரும் படியும் கேட்டுக் கொண்டது. இது ஒருவேளை மகேந்திர சிங் தோனி சென்னை அணிக்காக விளையாடும் கடைசி போட்டியாக இருக்குமா? என்று ரசிகர்கள் சற்று பதட்டத்துடன் இருக்கிறார்கள்.

