இன்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆடுகளம் இரண்டாவது பாதியில் பேட்டிக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ருத்ராஜ் இந்த முடிவை எடுத்தார். இதன்படி குஜராத் அணியின் இன்னிங்சை கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் தொடங்கினார்கள். மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக சகா இந்தப் போட்டியில் விளையாடவில்லை.
இதற்கு தகுந்தவாறு இந்த ஜோடி மிகவும் அருமையாக விளையாடியது. பவர்பிளே வரை 50 ரன்கள் கடந்த ஜோடி பத்து ஓவர்களுக்குள் நூறு ரன்களையும் தொட்டது. இருவரும் அபாரமாக விளையாடி சதம் அடித்த பின்னர் சாய் சுதர்சன் 51 பந்துகளில் 5 பவுண்டரிகள், ஏழு சிக்ஸர்களுடன் 103 ரன்களும், அணியின் கேப்டன் கில் 55 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 104 ரன்களும் குவித்தனர்.
இந்த ஜோடி 17 ஓவர்களில் 210 ரன்கள் குவித்து முதல் விக்கெட்டுக்கு சாதனை படைத்தது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் வெளியேறிய பின்னர் டேவிட் மில்லர் 11 பந்துகளில் 16 ரன்கள் குவித்தார். இதனால் இறுதியாக குஜராத் அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது. சென்னை அணித்தரப்பில் ஓரளவு நன்றாக பந்து வீசிய துஷார் தேஸ் பாண்டே நான்கு ஓவர்களில் 33 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.
இதை அடுத்து இந்த மெகா இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்தது. மூன்று ஓவர்களில் 10 ரன்களுக்குள் மூன்று விகட்டுகள் இழந்த நிலையில், தடுமாறிய சென்னை அணி அதற்குப் பின்னர் ஜோடி சேர்ந்த டாரி மிச்சல் மற்றும் மொயின் அலி கூட்டணி அதிரடியாக விளையாடி 57 பந்துகளில் 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் குவித்தது ஓரளவு நம்பிக்கை அளித்த இந்த ஜோடியை மோஹித் சர்மா பிரித்தார்.
34 பந்துகளுக்கு 63 ரன்கள் குவித்த நிலையில் டாரி மிச்சல் வெளியேற, அவரைத் தொடர்ந்து 36 பந்துகளுக்கு 54 என்று குவித்த மொயின் அலியும் வெளியேறினார். அதற்குப் பின்னர் சிஎஸ்கே அணியின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் தகர்ந்தது. பிறகு வந்த பேட்ஸ்மெண்டில் துரிதமான ரண்களை சேகரிக்க, இறுதியாக களமிறங்கிய மகேந்திர சிங் தோனி 11 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்சர்களை விளாசி 26 ரன்கள் குவித்து ரசிகர்களை ஓரளவு ஆறுதல் படுத்தினார். சிறப்பாக பந்து வீசிய மோஹித் சர்மா நான்கு ஓவர்களில் 31 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையும் படிங்க:சிஎஸ்கேவுக்கு எதிராக கலக்கிய தமிழன் சாய் சுதர்சன்.. கில், சுதர்சன் ஜோடி அபாரம்.. 231 ரன்கள் மெகா இலக்கை நிர்ணயித்த குஜராத்
இதனால் சென்னை அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி சென்னை அணியை தோற்கடித்தது. புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் சென்னை அணி இனி வரும் அடுத்த 2 போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். இனி ஏதேனும் ஒரு போட்டியில் தோல்வியை தழுவினாலும் பிளே ஆப் சுற்றில் இருந்து சென்னை அணி வெளியேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

