17வது ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி இருக்கிறது.
தொடர் தோல்விகளுக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பி இருக்கிறது. வெற்றிக்கான காரணம் குறித்து ஹர்திக் பாண்டியா சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ட்ராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 48 ரன்களும், பின்னர் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய பேட் கம்மின்ஸ் 17 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் இரண்டு சிக்சர்கள் என 35 ரன்கள் குவித்தனர். இதனால் 20 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 8 விக்கெட்டுக்கு 173 ரன்கள் குவித்தது.
அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. ரோகித் சர்மா, இசான் கிசான் மற்றும் நமன் திர் விரைவிலேயே ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். அதற்குப் பின்னர் ஜோடி சேர்ந்த திலக் வர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் ஜோடி மும்பை அணியை சரிவிலிருந்து மீட்டது. அபாரமாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 51 பந்துகளில் 102 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் மும்பை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இவரோடு பார்ட்னர்ஷிப் அமைத்த திலக் வர்மா 32 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார். இந்த வெற்றிக்கு பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசும்பொழுது
“நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம். இந்த போட்டியில் 10 முதல் 15 ரன்கள் வரை கூடுதலாக வழங்கி விட்டோம் என்று நினைக்கிறேன். நான் சரியான இடத்தில் துல்லியமாக பந்து வீச விரும்புகிறேன். இன்று அது எனக்கு பெரிதும் உதவியது.
எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் பெரிய தவறுகள் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள். சூரியகுமார் யாதவ் விளையாடிய விதம் மிகவும் அபாரமாக இருந்தது. அவர் எப்போதும் பந்துவீச்சாளர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறார். டி20 கிரிக்கெட் பொருத்தவரை சூரியகுமார் யாதவ் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். அவரால் எந்த நேரத்திலும் ஆட்டத்தினை மாற்ற முடியும். அவர் எங்கள் அணியில் இருப்பது பெரிய அதிர்ஷ்டம்” என்று கூறியிருக்கிறார்.
இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி பத்தாவது இடத்தில் இருந்து ஒரு இடம் முன்னேறி ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் நான்கு போட்டிகளில் வெற்றியும், எட்டு போட்டிகளில் தோல்வியையும் தழுவி இருக்கிறது. குஜராத் அணி தற்போது புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

