பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியில், பெங்களூர் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமான தோல்வியை தழுவியது.
முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 287 ரன்கள் மூன்று விக்கெட் இழப்புக்கு குவித்தது. அந்த அணியின் அபிஷேக் ஷர்மா 22 பந்துகளில் 34 ரன்கள், டிராவீஸ் ஹெட் 41 பந்துகளில் 102 ரன்கள், கிளாஸன் 31 பந்துகளில் 67 ரன்களும், மார்க்ரம் 17 பந்துகளில் 32 ரன்களும், சமத் பத்து பந்துகளில் 37 ரன்களும் குவித்தனர்.
பின்னர் இந்த கடின இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணி முதல் விக்கெட்டுக்கு 6.2 ஓவர்களில் 80 ரன்கள் குவித்த நிலையில் விராட் கோலியின் விக்கெட்டை பறி கொடுத்தது. சிறப்பாக விளையாடிய விராட் கோலி 20 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் இரண்டு சிக்சர்களுடன் 42 ரன்கள் குவித்தார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பாப் டூப்ளிசஸ் 28 பந்துகளில் 7 பவுண்டரிகள், நான்கு சிக்ஸர்களுடன் 62 ரன்கள் குவித்தார். தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் மட்டும் அபாரமாக விளையாடி இறுதி கட்டத்தில் 35 பந்துகளில் 87 ரன்கள் குவித்த நிலையில் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர் நடராஜனின் வலையில் விழுந்தார். ஐந்து பௌண்டரிகள், ஏழு சிக்ஸர்கள் குவித்த நிலையில் எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்து வெளியேற பெங்களூர் அணியின் கனவும் முடிவுக்கு வந்தது.
இதனால் இறுதியில் 7 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் குவித்தது. தோல்விக்கு பின்னர் பேசிய பெங்களூர் அணியின் கேப்டன் பாப் டூபிளஸ்சிஸ் கூறும் பொழுது
” இந்த டி20 ஆடுகளத்தில் எங்களது பேட்டிங் திறன் மிகச் சிறப்பாகவே இருந்தது. வெற்றி இலக்க ரன்களை நெருங்க முயற்சித்தோம். 280 ரன்கள் என்பது மிகப்பெரிய இலக்கு. அதை துரத்துவது கடினம். நாங்கள் இந்த போட்டியில் வெவ்வேறு விஷயங்களை முயற்சி செய்து பார்த்தோம்.
உங்கள் தன்னம்பிக்கை குறைவாக இருக்கும் போது அதை மறைக்க வேறு வழி இல்லை. இந்த ஆடுகளத்தில் எங்களது பந்துவீச்சாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர். பேட்டிங் போலவே இன்னும் சில துறைகளில் எங்கள் அணி முன்னேற்றம் காண வேண்டும். பவர் பிளேவுக்கு பிறகு ரன் ரேட் குறையாமல் விளையாட வேண்டியது அவசியம். எங்கள் அணி வீரர்கள் சேசிங்கில் அற்புதமாக செயல்பட்டனர்.
இதையும் படிங்க:டி20 கிரிக்கெட் மாறிடுச்சு.. பவுலருக்கு எட்டு ஓவர் இருந்தாதான் ஏதாவது பண்ண முடியும்.. வெற்றிக்குப் பின்னர் பேட் கம்மின்ஸ் பேட்டி
இப்போட்டி சிறப்பாக இருந்தது. பேட்டிங் பொருத்தவரை அணி வீரர்கள் கடைசிவரை முயற்சியை கைவிடவில்லை. பந்துவீச்சில் 40 ரன்கள் வரை அதிகமாக கொடுத்து விட்டோம். மனதைப் புத்துணர்ச்சியாக்கி விட்டு செல்ல வேண்டும். இப்போட்டி மனத்திடத்திற்கு ஒரு நல்ல உதாரணம். சில நேரங்களில் உங்கள் மனது வெடிக்கப் போவதாக உணர்வீர்கள்.” என்று கூறி இருக்கிறார்

