நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இருந்தது. இந்த நிலையில் மும்பை அணியின் கேப்டன் ஆன ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி மீது விமர்சனங்கள் வலுத்து வருகிறது.
நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி சிவம் தூபே மற்றும் ருத்ராஜ் ஆகியோர் நன்றாக விளையாடி ஓரளவு சவாலான ஸ்கோரை மும்பை அணிக்கு கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் மும்பை அணியின் பந்துவீச்சு அப்போது வரை நன்றாகவே இருந்தது.
போட்டியின் 19 ஆவது ஓவரை மும்பை அணியின் ஜஸ்பிரித் பும்ரா போட்டு முடிக்க, ஆட்டத்தின் கடைசி ஓவரை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா வீச வந்தார். அதுவரை 180 ரன்கள் என்ற நிலையில்தான் மும்பை அணி இருந்தது. ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவரில் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு வைட் மற்றும் ஒரு பவுண்டரி என ஆறு ரன்கள் கிடைத்தது.
ஆனால் ஆட்டத்தின் மூன்றாவது பந்தில் களமிறங்கிய மகேந்திர சிங் தோனி, தொடர்ச்சியாக மூன்று சிக்ஸர்களை விளாசினார். கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுக்க அந்த ஓவரில் மட்டும் 26 ரன்கள் கிடைத்தது. இதனால் சென்னை அணி 200 ரன்களுக்கு மேல் வெற்றி இலக்கை நிர்ணயித்தது.
இதனால் கடைசி ஓவரை வேறு பந்து வீச்சாளருக்கு கொடுக்காமல் ஹர்திக் பாண்டியா எதற்காக வீசினார். மேலும் அவரது கேப்டன்சியும் சுமாராக இருக்கிறது என்று பல விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன் ஹர்திக் பாண்டியா நார்மலாக இருப்பது போல நடிக்க முயல்கிறார் என்று கூறி இருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது
“உண்மையில் ஹர்திக் பாண்டியாவின் விளையாட்டை விமர்சிப்பது அவரை மனரீதியாக பாதிக்கும். அவர் விளையாட்டில் இருந்து விலகி இருக்க இது ஒரு காரணமாக அமைகிறது. இப்படி அவரை விமர்சனங்கள் செய்தால் மகிழ்ச்சியாக இருப்பது போல நடிக்க முயல்கிறார். ஆனால் உண்மையில் அவர் மகிழ்ச்சியாக இல்லை மகிழ்ச்சியாக இருப்பது போல காட்டிக் கொள்கிறார்.
இதையும் படிங்க:தோனி ஆடிய சரவெடி ஆட்டம்.. உறைஞ்சு போன மும்பை அணி.. கூறுகிறார் சிஎஸ்கே பவுலிங் ஆலோசகர்
அவருடைய மனதில் பல வேதனைகள் இருக்கிறது. நான் இந்த இடத்தில் இருப்பதன் காரணமாக அவரின் வேதனையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஹர்திக் பாண்டியாவுக்கு என்ன நடக்கிறது என்று என்னால் சொல்ல முடியும். கடைசி ஓவரில் அவர் கொடுத்த ரன்கள் குறித்து அவர் மீது விமர்சனம் செய்கிறீர்கள். அது அவரது மனதை புண்படுத்தும். ஏனெனில் கிரிக்கெட் வீரர்களுக்கும் உணர்ச்சி இருக்கிறது. இப்படி அவரை விமர்சனம் செய்ய வேண்டாம்” என்று கூறி இருக்கிறார்.

