நேற்று நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சக வீரரை திட்டியுள்ள சம்பவம் ஸ்டம்பில் உள்ள மைக்குகளின் ஆடியோ மூலம் தெரிய வந்துள்ளது.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது. இதன் பின்னர் களம் இறங்கிய குஜராத் அணி ரசித் கான் மற்றும் திவாட்டியா ஆகியோரின் இறுதி கட்ட அதிரடியின் மூலம் 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.
இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு சீசனில் முதன்முறையாக தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்த குஜராத் அணிக்கு இந்த வெற்றியின் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது. ஒரு கட்டத்தில் ராஜஸ்தானி வெற்றி பெறும் நிலையிலேயே இருந்தது. ஆனால் குஜராத் அணியின் ரசித் கான் மற்றும் ராகுல் திவாட்டியா ஆகியோரின் இறுதிக்கட்ட அதிரடி ஆட்டத்தால் குஜராத் அணி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் நான்கு ஓவர்கள் பந்துவீசி 40 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் கூட அவரால் எடுக்க முடியவில்லை. மேலும் அவர் வீசிய பதினேழாவது ஓவரில் ஒரு பவுண்டரி, மற்றும் ஒரு சிக்ஸர் உட்பட 17 ரன்கள் வந்தது. இது குஜராத் அணி அதிரடி ஆட்டத்தை ஆரம்பிக்க ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த சூழ்நிலையில் அஸ்வின் மேலும் ஒரு புதிய பிரச்சனையில் சிக்கியுள்ளார்.
அஸ்வின் 17 வது ஓவரின் இரண்டாவது பந்தை வீசுவதற்கு முன்பாக ஃபீல்டிங்கில் சில மாற்றங்கள் செய்தார். அப்போது ஷார்ட் பேட்மேன் வரிசையில் நின்ற பீல்டரை பின்னால் போகச் சொல்லி சஞ்சு சாம்சனிடம் “பின்னாடி போய் நிக்க சொல்லு, அந்த சனியனை” என்று திட்டியுள்ளார். உடனே ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் “பின்னாடி போய் நில்லுடா” என்று கூறியுள்ளார்.
அப்போது இவர்கள் இருவரும் பேசி ஆடியோ ஸ்டம்புகளில் இருந்த மைக்குகளில் பதிவானது. பொதுவாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் அஸ்வின் ஆகிய இருவரும் தமிழிலேயே பெரும்பாலும் உரையாடுவார்கள்.
இதையும் படிங்க:சிக்ஸர் அடிச்சு ஜெயிக்க வைக்கிறது ஓகே.. ஆனா அதுக்கு முன்னாடி இந்த விஷயம் நம்மகிட்ட இருக்கணும்.. வெற்றிக்குப் பின் ரஷீத் கான் பேச்சு
இவர்கள் இருவரைத் தாண்டி ராஜஸ்தான் அணியில் வேறு எந்த வீரருக்காவது தமிழ் தெரியுமா என்று தெரியவில்லை. அவர்களின் இந்த உரையாடல் தற்போது எல்லை மீறி ஒரு வீரரை திட்டும் அளவுக்கு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

