ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தற்போது இந்தியாவில் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இப்போட்டியில் ருத்ராஜ் தலைமையில் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன. மூன்றாவது வெற்றியைப் பெற சென்னை அணியும், முதல் வெற்றியைப் பெற டெல்லி அணியும் போராடும் என்பதால் இப்போட்டி அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி அணியைப் பொறுத்தவரை தனது முதல் இரு போட்டிகளிலும் தோல்வியை தழுவி பரிதாப நிலையில் உள்ளது. டேவிட் வார்னர், மிச்செல் மார்ஸ் , ரிஷப் பந்த், அக்சர் பட்டேல் போன்ற நட்சத்திர வீரர்கள் இருப்பினும் முக்கிய கட்டத்தில் ஆட்டத்தை எடுத்துச் செல்ல வேண்டிய பேட்ஸ்மேன்கள் அவுட் ஆகி விடுவதால், இறுதியில் அந்த அணி தோல்வியைத் தழுவுகிறது.
பந்துவீச்சில் அதே போல இசாந்த் சர்மா தற்போது காயம் காரணமாக வெளியேறி இருப்பதால் நோக்கியா, அக்ஷார் பட்டேல் மட்டுமே குறிப்பிடத்தக்க எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். எனவே பலம் வாய்ந்த சென்னை அணியை டெல்லி அணி எவ்வாறு கையாளப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம். மேலும் சென்னை அணியைப் பொறுத்தவரை பேட்டிங் பந்து வீச்சு, பீல்டிங் என்று அனைத்து துறைகளிலும் வலுவாக விளங்குகிறது. எனது இந்தப் போட்டியிலும் சென்னை அணியின் கையே ஓங்கி உள்ளது.
சென்னை அணி ரசிகர்களைப் பொறுத்த வரை ஒரே ஒரு குறை என்னவென்றால் மகேந்திர சிங் தோனி இன்னும் பேட்டிங்கில் களமிறங்காதது மட்டுமே. அதுவும் இன்று நடக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி தெரிவித்துள்ளார். மேலும் கடைசி ஓவரில் களமிறங்கி சிக்ஸர் அடித்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கவும் வாய்ப்புள்ளது என்று அவர் கணித்திருப்பதாகக் கூறி இருக்கிறார். இது குறித்த அவர் கூறும் பொழுது
“என்னுடைய கணிப்பின்படி மகேந்திர சிங் தோனி போட்டியின் கடைசி ஓவரில் கட்டாயமாக பேட்டிங் செய்வார். மக்களின் கரகோஷங்களுக்கு இடையே சிக்சர் அடித்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பார்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். அவரது இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.
இதையும் படிங்க:
மைக்கேல் ஹசியின் கூற்றுப்படி விசாகப்பட்டினம் மகேந்திர சிங் தோனிக்கு ராசியான மைதானம் ஆகும். எனவே அவரது கருத்தைப் போலவே மகேந்திர சிங் தோனி நிச்சயமாக களமிறங்கி ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்று சென்னை அணி ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

