நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பெங்களூர் அணியின் மோசமான பந்துவீச்சு செயல்பாட்டால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 16.5 ஓவர்களிலேயே வெற்றி இலக்கினை அடைந்தது.
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் பெங்களூர் அணிக்கு சாதகமாக அமையவில்லை. இதன்படி பேட்டிங்கை தொடங்கிய பெங்களூர் அணிக்கு விராட் கோலி, மேக்ஸ்வெல் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் சிறப்பாக விளையாடிய ரன்களை குவித்தாலும் இறுதிக்கட்டத்தில் அந்த அணியால் அதிரடியாக விளையாட முடியாத காரணத்தால் 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது.
ஒரு கட்டத்தில் பெங்களூர் அணி 200 ரன்களுக்கு மேல் போய்விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொல்கத்தா அணி பந்துவீச்சாளர்கள் ஸ்லோவர்ஒன் மற்றும் கட்டர்கள் என்று பந்துவீச்சில் வேரியேஷன்கள் காமித்து பெங்களூர் அணியின் ரன் வேகத்திற்கு முட்டுக்கட்டை போட்டனர். இதனால் இறுதிக்கட்டத்தில் விராட் கோலி களத்தில் இருந்தும் ரன்கள் குவிக்க முடியவில்லை.
ஓரளவு சவாலான ஸ்கோரை பெற்ற போதிலும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நிலைமை தலைகீழாகவே அமைந்தது. இன்னிங்சை தொடங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சுனில் நரேன் மற்றும் சால்ட் ஆகியோர் முதல் ஆறு ஓவர்களிலேயே அதிரடியாக விளையாடி கொல்கத்தா அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
பெங்களூர் அணியின் எந்த பந்துவீச்சாளராலும், கொல்கத்தா அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை. பெங்களூர் அணியின் முன்னணி வேகப்பந்து பேச்சாளர் ஆன சிராஜ் மூன்று ஓவர்களில் 46 ரன்களை வாரி வழங்கினார். அந்த அணியில் வைசாக் விஜயகுமார் மட்டுமே நான்கு ஓவர்களில் 23 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். பெங்களூர் அணியின் மோசமான பந்துவீச்சு குறித்து முன்னணி வீரர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறுகையில்
“இந்த பந்து வீச்சினை வைத்துக்கொண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் போட்டிகளை வெல்ல முடியாது” என்று காட்டமாக விமர்சித்திருக்கிறார். டிசம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்தின் போதே பெங்களூர் அணி தரமான பந்துவீச்சாளர்கள் எடுக்கவில்லை. எனவே இந்த முறையும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது கடினம் என்று தேர்வுக்குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் உட்பட பல முன்னணி வீரர்கள் விமர்சித்திருந்தனர்.
இதையும் படிங்க :ஆஸ்கார் குடுறா ட்ரம்ப்பே.. என்ன நடிப்புடா சாமி.. கோலி, கம்பீர் சந்திப்பு குறித்து சுனில் கவாஸ்கர்
பெங்களூர் அணி தற்போது வெளிநாட்டு பந்துவீச்சாளராக அல்சாரி ஜோசப்பை மட்டுமே பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. மேலும் அணியில் மூன்று முக்கிய வெளிநாட்டு வீரர்களாக மேக்ஸ்வெல், கேப்டன் டூப் பிளஸ்சி மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் இருப்பதால் ஒரே ஒரு வெளிநாட்டு பந்து வீச்சாளரை மட்டுமே பயன்படுத்தும் நிலைக்கு தற்போது பெங்களூர் அணி இருப்பது குறிப்பிடத்தக்கது.

