பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடிக் கொண்டிருந்தபோது கம்பீர் கோலி கைகுலுக்கியதை பார்த்து வர்ணனையாளர் கவாஸ்கர் கேலியான முறையில் தனது கருத்தை தெரிவித்திருந்தார்.
ஆர்சிபி அணியின் சொந்த மைதானமான பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 59 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். பின்னர் கேமரூன் கிரீன் 38 ரன்களும், மேக்ஸ்வெல் 28 ரன்களும் குவிக்க இறுதிக்கட்டத்தில் தினேஷ் கார்த்திக் இருபது ரன்கள் குவித்தார்.
பின்னர் 183 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முன்னணி பேட்ஸ்மேன்களின் அபாரமான ஆட்டத்தால் 17 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை அடைந்தது. அந்த அணியில் அபாரமாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 50 ரன்களும், நரேன் 47 ரன்களும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 39 ரன்களும் குவித்தனர்.
இப்போட்டியின் முதல் இன்னிங்சில் பெங்களூர் அணியின் விராட் கோலி பேட்டிங்கை முடித்து பெவிலியனை நோக்கி திரும்பிக் கொண்டிருக்க, எதிரே வந்த கொல்கத்தா அணியின ஆலோசகர் கௌதம் கம்பீர் விராட் கோலியை பார்த்ததும் புன்னகையுடன் சில வார்த்தைகள் பேச ஆரம்பித்தார். அதற்கு விராட் கோலி சிரித்த முகத்துடனே பதில் அளித்து செல்லும் காட்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
சாதாரணமாக இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் களத்தில் சந்தித்துக் கொண்டால் முறைத்துக் கொள்வார்கள். 2013ஆம் ஆண்டு கொல்கத்தா அணியின் கேப்டனாக கம்பீர் இருந்தபோது பெங்களூரின் கேப்டனாக விராட் கோலி இருந்தார். அப்போது போட்டி முடிந்த பின்பு இவர்கள் இருவருக்கும் நடந்த சண்டை அவ்வளவாக எளிதில் மறக்க முடியாது. மேலும் கடந்த ஆண்டு புனே அணிக்கு எதிரான போட்டியிலும் ஆலோசகராக கௌதம் கம்பீர் இருந்த போது இதே போன்ற சண்டை வெளிப்பட்டது. இவ்வாறு இருக்கும் போது இவர்கள் இருவரின் இந்த சந்திப்பு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது மட்டுமல்லாமல் வர்ணனையாளர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தக் காட்சியை கண்ட வர்ணனையாளர் ரவி சாஸ்திரி
“இவர்கள் இருவருக்கும் ஒழுக்கத்தின் வெளிப்பாடாக வழங்கப்பட்டு வரும் பேர்பிளே அவார்டு வழங்கப்பட வேண்டும் என்று கூறினார். அதற்கு பதில் அளித்த சுனில் கவாஸ்கர் “அந்த விருது மட்டும் கொடுத்தால் போதாது. இவர்கள் இருவருக்கும் ஆஸ்கார் விருது கொடுக்கப்பட வேண்டும் என்று கிண்டலாகவும், நகைச்சுவையாகவும் கூறினார். இவர்கள் பேசிய காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படிக்கலாமே:ரஸல் இது செட் ஆகாதுன்னு தெரிஞ்சு திட்டத்தை மாத்துனாரு.. சுனில் நரேன் பத்தி கொஞ்சம் யோசிச்சோம் ஆனா.. வெற்றி குறித்து கூறும் கேகேஆர் கேப்டன்
இரண்டு போட்டிகளில் விளையாடிய கொல்கத்தா அணி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்த இடத்தில் உள்ளது. வெற்றிப் பாதையில் இருந்த பெங்களூர் அணி இந்த தோல்வியின் மூலம் மீண்டும் தோல்வி பாதைக்கு திரும்பியிருக்கிறது.

