2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு மோசமான காலமாக இருந்து வருகிறது. குஜராத் அணியில் கேப்டனாக இருந்தபோது ராஜாவாக வலம் வந்த அவர், 2024ஆம் ஆண்டு மும்பை அணிக்கு தாவினார்.
அப்போதே கேப்டன்சியும் ரோஹித் சர்மாவிடம் பறிக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா வசம் மும்பை அணி ஒப்படைத்தது. காரணம் கேட்டால் ரோஹித் சர்மாவுக்கு தற்போது வயது ஆவதால் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்று மும்பை அணி தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. ஆனால் 42 வயதாகிய மகேந்திர சிங் தோனி இன்னமும் சென்னை அணி கேப்டனாக இருந்து வருகிறார். தாமாக முன் வந்து மட்டுமே தற்போது ருத்ராஜிடம் கேப்டன் பதவியை ஒப்படைத்து இருக்கிறார்.
இப்படி இருக்கும் போது ஐந்து முறை மும்பை அணிக்காக ஐபிஎல் பட்டங்களை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவிடமிருந்து கேப்டன் பதவியை பறிப்பது என்பது ஏற்கத்தக்கது அல்ல என்று மும்பை அணி ரசிகர்களும், ரோகித் சர்மாவின் ரசிகர்களும் மும்பை அணிக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.
இதன் விளைவாக ஹர்திக் பாண்டியா தலைமையில் மும்பை அணி பங்கு பெற்ற முதல் போட்டியில் குஜராத் அணி ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கரகோஷம் எழுப்ப தொடங்கினர். இருப்பினும் இதனை களத்தில் பாண்டியா பெரிதாக வெளிகாட்டவில்லை. இதை இன்னும் எரிச்சலாக்கும் வகையில் மும்பை அணி அப்போட்டில் தோல்வியடைந்தது.
ஹைதராபாத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் பெரிய தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு தகுந்த ஒத்துழைப்பை கொடுப்பதில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், மும்பை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மலிங்கா போட்டி முடிந்த பிறகு ஹர்திக் பாண்டியாவிடம் கை கொடுக்க வருவார்.
ஆனால் அதை ஏற்க மறுத்த பாண்டியா அவரை தள்ளிவிட்டு விலகிச் செல்வது போன்ற காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட ரசிகர்கள் ஒரு சீனியர் வீரரை இப்படியா நடத்துவது? என்று கேள்வி கேட்டு வருகின்றனர். இதன் மூலம் மும்பை அணிக்குள் பிளவு இருப்பதை இந்த வீடியோ காட்சி தெளிவுபடுத்துகிறது. இருப்பினும் ஹர்திக் பாண்டியா மும்பை அணியில் பயிற்சி பெறும்போது மலிங்காவுடன் சகஜமாக பேசும் வீடியோவையும் மும்பை அணி நிர்வாகம் பதிவிட்டிருந்தது. இதனால் ஹைதராபாத் அணி வீரர்களிடம் வேகமாக கை கொடுக்க செல்லும்போது நெருங்கிய நண்பரான மலிங்காவை நட்பு ரீதியாக விளக்கி விட்டுச் சென்றதாகவும் பாண்டியா ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது தெரிந்தவரையில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாக இருப்பது பொல்லார்டு மற்றும் இசான் கிசான் மட்டுமே. அண்டை மாநிலங்களில் நடைபெறும் போட்டிகளிலேயே பாண்டியாவுக்கு எதிர்ப்புக் குரல் இவ்வாறு இருக்கும் போது மும்பை அணியின் சொந்த மைதானமான வாங்கடேயில் போட்டி நடந்தால் ஹர்திக் பாண்டியாவின் நிலைமை என்னாகும் என்று ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

