இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 17வது சீசன் வெள்ளிக்கிழமை தொடங்கி தற்போது வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மகேந்திர சிங் தோனி யாரும் எதிர்பாராத விதமாக போட்டி தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னர் கேப்டன்சியில் இருந்து விலகி தொடக்க ஆட்டக்காரர் ருத்ராஜிடம் கேப்டன் பதவியை ஒப்படைத்தார்.
இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள், பயிற்சியாளர் மற்றும் சிஇஓ காசி விஸ்வநாதன் அவர்களுக்கு ஒரு நாள் முன்னர் தான் தெரியும் என்று கூறப்படுகிறது. அணியின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு மகேந்திர சிங் தோனி இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு மெகா ஏலம் நடைபெறுவதால் தற்போது 42 வயதான மகேந்திர சிங் தோனி அடுத்த ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா? என்பது சந்தேகமாக இருக்கும் நிலையில் தற்போது சரியான முடிவைத்தான் எடுத்திருக்கின்றார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் கேப்டன்சி அனுபவம் இல்லாத இளம் வீரர் ருத்ராஜ் இவ்வளவு பெரிய பதவியை கொடுத்தால் அவரால் அதை சரியாக கையாள முடியுமா? மேலும் இந்த பொறுப்பினால் அவரது பேட்டிங் திறன் பாதிக்கப்படுமா? என்று சந்தேகம் எழுந்தன. இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சிறப்பாக கேப்டன்சி செய்ததோடு அணியையும் வெற்றி பெற வைத்து இருக்கிறார்.
தோனி கேப்டன்சியில் இருந்து விலகப் போவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னதாகவே அவரை தயாராக இருக்கும்படியும், ‘எப்போது வேண்டுமானாலும் தான் கேப்டன் பதவியில் இருந்து விலகி விடுவேன் எனவே தயாராக இரு’ என்று கூறியதாகவும் ருத்ராஜ் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் மகேந்திர சிங் தோனி ஒரு போட்டி தொடங்கப்படுவதற்கு முன்பு மைதானத்தில் உள்ள சிறிது மண்ணை தூவி காற்றின் திசையை சரி பார்ப்பார். தற்பொழுது ருத்ராஜூம் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி தொடங்குவதற்கு முன்பு மண்ணை சிறிது தூவி காற்றின் திசையை சரி பார்த்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்த முறை பொதுவானது என்றாலும் அதிகமாக யாரும் இதை பயன்படுத்த மாட்டார்கள். ஆனால் தோனியை பின்பற்றி தற்போது ருத்ராஜ் அவர் வழியில் இணைந்திருப்பது சிஎஸ்கே சரியான நபர் ஒருவரின் கைகளில் தான் சேர்ந்து இருக்கிறது என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். பெங்களூர் அணிக்கு எதிரான முதல் போட்டி முடிந்ததற்கு பின்னர் கேப்டன்சி குறித்து எனக்கு எந்த அழுத்தமும் இல்லை என்றும் மகேந்திர சிங் தோனி தனுடன் இருக்கிறார் என்றும் ருத்ராஜ் கெய்க்வாட் தெரிவித்து இருக்கிறார்.
Rutu checking the direction of wind using soil/dust. Only Thala used to do such tricks. Rutu following Thala every way possible 🥹💛 CSK is Safe 🫶pic.twitter.com/0lIHJcM60Q
— 🤍✍ (@imAnthoni_) March 25, 2024

