இந்தியாவில் நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் நேற்று வெற்றிகரமாக துவங்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் பாடல் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.
தொடக்க நிகழ்ச்சிகளுக்கு அடுத்து முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. தொடக்கத்தில் மிகச் சிறப்பாக ஆடிய பெங்களூர் அணி எதிர்பாராத சமயத்தில் அடுத்தடுத்து மிக முக்கிய மூன்று விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 200 ரன்களுக்கு மேல் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதியாக பெங்களூர் அணியால் 173 ரன்கள்மட்டுமே குவிக்க முடிந்தது.
பெங்களூர் அணியில் அனுஜ் ராவத் அதிகபட்சமாக 48 ரன்களும், தினேஷ் கார்த்திக் 38 ரன்களும், டு பிளசிஸ் 35 ரன்கள் குவித்தனர். இதற்கு அடுத்து 174 ரன்கள் குவித்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு முதல் விக்கெட் சீக்கிரமே விழுந்தாலும், இதற்குப் பின்னால் வந்த பேட்ஸ்மேன்கள் நிதானமாக நின்று விளையாடி சென்னை அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
சென்னை அணியில் அதிகபட்சமாக ரச்சின் ரவிந்த்ரா 37 ரன்களும், சிவம் துபே 34 ரன்களும் அடித்தனர். சென்னை அணியில் சிறப்பாக பந்து வீசி நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றிய முஸ்தபிகுர் ரஹ்மான் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த போட்டியின் நடுவே ஒரு சுவாரசியமான சம்பவம் நடைபெற்றது. ஃபீல்டிங்கின் நடுவே அவ்வப்போது குறும்புகளை செய்யும் விராட் கோலி, சென்னை அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது தனது சேட்டையை வெளிக் காட்டினார்.
மைதானத்தில் ஒளிபரப்பப்பட்ட தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘கில்லி’திரைப்படத்தின் அப்படி போடு என்ற பிரபலமான பாடல் ஒளிபரப்பப்பட்டது. அதனைப் கேட்ட விராட் கோலி மைதானத்திலேயே ரசிகர்களின் முன்னிலையில் சில நடன அசைவுகளை வெளிப்படுத்தினார். இது மைதானங்களில் இருந்த கேமராவில் பதிவாகி இப்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய விராட் கோலி சிறிது இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல்லில் மீண்டும் பெங்களூர் அணிக்காக இணைந்துள்ளார். முதல் போட்டியில் இவரது ஆட்டம் குறிப்பிடப்படும் படியாக அமையவில்லை. 20 பந்துகளை சந்தித்த அவர் 21 ரன்கள் மட்டுமே குவித்த நிலையில் முஸ்தபிகுர் ரகுமானின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.
எனவே இவரது ஐபிஎல் செயல்பாடுகளை வைத்தே வரும் டி20 உலக கோப்பையில் இவரை தேர்வு செய்வது குறித்து பிசிசிஐ பரிசீலித்து வரும் வேளையில், இவர் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் மிகவும் கூலாக தன்னை இயல்பு நிலையில் வைத்திருக்கிறார். இவரது பேட்டிங் குறித்து உலகமே அறியும் வேளையில், மிக விரைவாகவே இந்த ஐபிஎல்லில் தன்னை நிரூபிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
Virat Kohli – the greatest character. 😂❤️pic.twitter.com/2f4SsVf8OR
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 22, 2024

