ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான இரு அணிகளாக கருதப்படும் சென்னை மற்றும் மும்பை அணிகளில் விளையாடப்படும் பெரும்பாலான வீரர்கள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் அணியில் ஏதேனும் ஒரு பதவியில் பயிற்சியாளராகவோ அல்லது ஆலோசகர்களாகவோ பதவி வகிப்பார்கள்.
இத்தகைய வீரர்கள் போட்டிகளில் விளையாடி தங்கள் முத்திரையை பதித்து விட்டால், அவர்களின் அடையாளம் கடைசி வரை வேண்டும் என இந்த இரண்டு அணிகளும் விரும்பும். அப்படி மும்பை அணியிலிருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற கீரன் பொல்லார்டு உடனடியாக பந்துவீச்சு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இதே போல மலிங்காவும் அணியின் முக்கிய பொறுப்பில் பதவி வகிக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் அடையாளமாக கருதப்படும் சச்சின் டெண்டுல்கர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், தற்போதும் கலந்து கொண்டு மும்பை அணியைத் தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகிறார். இதுவே சென்னை அணியினை எடுத்துக் கொண்டால் அந்த அணியில் விளையாடிய மைக் ஹசி மற்றும் டிவைன் பிராவோ ஆகியோர் அணியின் நிர்வாகப் பொறுப்புகளில் உள்ளனர்.
ஐந்து பட்டங்களை பெற்றுள்ள சென்னை அணிக்கு பிராவோவின் பங்களிப்பு என்பது மிக முக்கியமானது. அவரது அசத்தலான பேட்டிங் மற்றும் அணியின் இக்கட்டான நேரங்களில் அவரது பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் தனித்துவமான முத்திரையைப் பதித்து விடுவார். அதிலும் விக்கெட்டினை வீழ்த்தி விட்டால் அவர் ஆடும் நடனம் போட்டியை கண்டு களிப்பவர்களுக்கு சிறந்த பொழுதுபோக்காக அமையும்.
தற்போது பயிற்சியாளர் பொறுப்பில் இருக்கும் பிராவோ சென்னை அணி குறித்தும், அதன் உரிமையாளர்கள் குறித்தும், அணி வீரர்கள் குறித்தும் சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்திருக்கிறார் இதைப் பற்றி அவர் கூறுகையில்
“எங்களது அணி உரிமையாளர்களிடமிருந்து எவ்வித அழுத்தமும், தலையீடும் இதுவரை வந்தது கிடையாது. எங்கள் அணியின் வீரர்களை அவர்களது போக்கிலேயே செயல்பட விடுவதே நிர்வாகத்தின் தனிப்பட்ட சிறப்பு.
தற்போது எங்களிடம் மிகச் சிறந்த அணி இருக்கிறது. எனவே இந்த முறையும் வலிமையாக தொடரும் நோக்கத்தில் இருக்கிறோம். கடந்த சீசனில் எங்கு முடித்தோமோ அதே நிலையில் தற்போது தொடங்க இருக்கிறோம். இந்த முறை சென்னை அணியின் பந்துவீச்சு மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது
கடந்த சீசனில் தவறவிட்ட சர்துல் தாக்கூரை இந்த முறை திரும்ப பெற்றிருப்பது எங்களுக்கு கூடுதல் போனஸ். அவரால் நிறைய வெற்றிகளை சென்னை அணிக்காக பெற்று தர முடியும். மேலும் பங்களாதேஷ் அணி வீரர் முஸ்தபிசுர் ரஹ்மானின் வேகமும், அனுபவமும் நிச்சயம் அணிக்கு கை கொடுக்கும். அதே வேளையில் துஷார் தேஷ் பாண்டேவும் இவர்களுடன் இணைந்து பணியாற்றுவது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியே” என்று கூறி இருக்கிறார்.

