இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க உள்ளது. தோனி விளையாடும் முதல் போட்டியைக் காண சென்னை அணி ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக எதிர்பார்த்து வருகின்றனர்.
கடந்த சில வருடங்களாகவே ஐபிஎல்லின் ஹாட் டாபிக் என்றால் அது மகேந்திர சிங் தோனியின் ஓய்வு முடிவு பற்றி தான். தோனி எப்போது தனது ஓய்வு முடிவினை அறிவிப்பார்? அதற்குப் பிறகு சென்னை அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது குறித்த பேச்சுக்கள் தான் சமீபத்தில் அதிக அளவு வலம் வருகின்றன.
ஆனால் யார் என்ன கூறினாலும் தோனி எடுக்கும் முடிவே இறுதியானது என்பதால், அவர் வாய் திறந்து கூறாமல் எந்த ஒரு தகவலையும் உறுதியாக சொல்ல முடியாது. தற்போது 42 வயதாகும் எம் எஸ் தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்று மீண்டும் எழத் தொடங்கியுள்ள நிலையில், அவரது ஓய்வு குறித்த பேச்சுக்களை சோசியல் மீடியாவில், ரசிகர்களும் கிரிக்கெட் வல்லுனர்களும் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.
இதையெல்லாம் பெரிதும் காதில் வாங்கிக் கொள்ளாத தோனி அண்மையில் சிஎஸ்கே அணியினருடன் இணைந்து தனது பயிற்சியை ஆரம்பித்திருக்கிறார். சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாடத் தொடங்கி இருக்கும் தோனியின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிக அளவு வைரலாக பரவி வருகிறது.
முந்தைய சீசனில் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சற்று விளையாடுவதற்கு சிரமப்பட்ட தோனி, காயத்துடனே முழு சீசனையும் விளையாடி முடித்து ஐபிஎல் கோப்பையையும் வென்று கொடுத்தார். மாற்று விக்கெட் கீப்பர் அணியில் இருந்தாலும், வருடத்திற்கு ஒருமுறை தன்னை காண வரும் ரசிகனை உற்சாகப்படுத்தும் விதமாக அவரே கீப்பிங் செய்தார். தொடர்ந்து கிப்பிங் செய்தால் காயம் பெரிதாகும் நிலை ஏற்படும் அபாயம் இருந்தாலும் கூட அதனை பொருட்படுத்தாது முழு சீசனிலும் விக்கெட் கீப்பிங் பணியை அவரே மேற்கொண்டார்.
இதுகுறித்து அவருடன் ஆரம்ப காலத்தில் விளையாடிய இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரும், சென்னை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஆர் பி சிங் தோனியின் இந்த அர்ப்பணிப்புக்கு எந்த விஷயம் காரணமாக இருக்கிறது என்பது குறித்து சுவாரசியமான பதிலை தந்திருக்கிறார் இது குறித்து அவர் கூறியதாவது
“2006 ஆம் ஆண்டு நாங்கள் இந்திய அணியில் விளையாடிய போது இந்த சம்பவம் நடந்தது. நாங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது எம் எஸ் தோனி என்னிடம் “நான் பேருந்தை விட்டு இறங்கும்போது யாரோ இருவர் என்னை பார்ப்பது போல் உணர்ந்தேன். இந்த எண்ணிக்கை எப்போது நான்காக மாறும். இந்த நான்கு எப்போது 40 ஆக மாறும்”என்று கூறினார். அவரது விளையாட்டு ஆர்வம் என்பது அவரது ஈடுபாட்டை தாண்டி தன்னைக் காண வரும் ரசிகனுக்காக முழு அர்ப்பணிப்பையும் கொடுக்க வேண்டும் என்பதே.
எனவே அவர் வரும் சீசனிலும் பேட்டிங் மற்றும் கீப்பிங் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். மேலும் பல பலமான சாட்களையும் அடிக்கும் நோக்கில் உள்ளார்” என்று கூறி இருக்கிறார்.

