வீடியோ: பேட்டிங் செய்யாமலேயே கிளீன் போல்ட்.. காலியான ஸ்டம்புகளை குறிவைத்து சாரா கிளென் எடுத்த விக்கெட் – ஆஸ்திரேலியாவில் நடந்த வினோத சம்பவம்

விமென்ஸ் பிக் பாஷ் லீக் (WBBL) தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை டியான்ட்ரா டாட்டின், ஒரு பந்தைக்கூட எதிர்கொள்ளாமல் விக்கெட்டை இழந்த சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது. எதிரணி பந்துவீச்சாளர் சாரா கிளென், பேட்ஸ்மேன் இல்லாத காலியான ஸ்டம்புகளை நோக்கி பந்துவீசி அவரை அவுட்டாக்கிய விதம் கிரிக்கெட்டில் அரிதாக நிகழும் சம்பவமாக அமைந்தது.

- Advertisement -

பிரிஸ்பேன் ஹீட் – மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகளுக்கு இடையிலான WBBL போட்டியில் இந்தச் சம்பவம் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 138 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ரெனிகேட்ஸ் அணி விளையாடியது.

- Advertisement -

ரெனிகேட்ஸ் அணியின் இன்னிங்ஸில் 15-வது ஓவரின்போது ஜார்ஜியா வார்ஹாம் ஆட்டமிழந்தார். அடுத்து பேட்டிங் செய்ய வர வேண்டிய டாட்டின் மைதானத்துக்கு வந்து கிரீஸில் தயாராவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டார். WBBL விதிப்படி, ஒரு விக்கெட் விழுந்த 75 விநாடிகளுக்குள் அடுத்த பேட்ஸ்மேன் பந்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். ஆனால், அந்தக் காலக்கெடுவுக்குள் டாட்டின் தயாராகவில்லை.

- Advertisement -

இதனால், நடுவர்கள் விதிப்படி அவரை ஆடுகளத்தின் ஓரமாக நிற்கச் செய்தனர். இதையடுத்து பந்துவீச வந்த இங்கிலாந்து வீராங்கனை சாரா கிளென், பேட்ஸ்மேன் இல்லாத ஸ்டம்புகளை நோக்கிப் பந்தை வீசினார். அந்தப் பந்து நேராக ஸ்டம்புகளைத் தாக்கியதால் டாட்டின் ஒரு பந்தைக்கூட சந்திக்காமல் டக் அவுட் ஆனார். WBBL வரலாற்றில் இந்த விதி முதன்முறையாக அமல்படுத்தப்பட்ட சம்பவமாகவும் இது அமைந்தது.

இந்தப் போட்டியில் முதலில் 4 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்கள் எடுத்திருந்த ரெனிகேட்ஸ் அணிக்கு, டாட்டினின் விக்கெட் மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இருப்பினும், கடைசி பந்து வரை சென்ற பரபரப்பான ஆட்டத்தில் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் சோஃபி மோலினியூ 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

WBBL போட்டிகளில் வேகத்தை அதிகரிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த 75 விநாடி விதி, இதுவரை இவ்வாறு ஒரு வீராங்கனையின் விக்கெட்டுக்கு காரணமாக இருந்ததில்லை. தற்போது டாட்டின் ஆட்டமிழந்த விதம், கிரிக்கெட்டில் உள்ள அரிதான விதிகளையும் மீண்டும் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles