இங்கிலாந்து உள்ளூர் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேனை ஏமாற்றுவதற்காக வித்தியாசமான முறையில் மோசடியில் ஈடுபட்ட பிரையன் டெவைன் என்ற வீரருக்கு 2 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ‘கிளிக்கி பாண்டிங்’ (Clicky Ponting) என்று அழைக்கப்படும் 38 வயதான இவர் செய்த செயலால், அவர் விளையாடிய கிளப்புக்கும் மிகப்பெரிய தண்டனை கிடைத்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றின்போது, எதிரணி பேட்ஸ்மேன் விளையாடிய பந்தை அவர் தவறவிட்ட நிலையில், பந்து பேட்டில் பட்டது போன்ற சத்தத்தை ஏற்படுத்த பிரையன் டெவைன் தனது விரல்களைச் சொடுக்கியுள்ளார். இதன் மூலம் பேட்ஸ்மேன் பந்தைத் தொட்டுவிட்டதாக நடுவருக்கு தவறான தோற்றத்தை ஏற்படுத்த முயன்றதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கவனத்தைப் பெற்றது.
இதையடுத்து அவரை இடைநீக்கம் செய்த சால்ட்பர்ன் கிரிக்கெட் கிளப், இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உட்படுத்தியது. தற்போது மேல்முறையீட்டு நடவடிக்கைக்குப் பிறகு அவருக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடைக்காலத்தில் அவர் கிரிக்கெட் விளையாடுவது மட்டுமின்றி, பயிற்சியாளராகச் செயல்படுவது, நடுவராகப் பணியாற்றுவது, ஸ்கோரிங் செய்வது மற்றும் ஜூனியர் அணிகளை நிர்வகிப்பது ஆகியவற்றுக்கும் அனுமதி கிடையாது.
https://x.com/ben_mummery/status/2081666886089965943?a=pTp9c6KVQxGMt-VYKTc&s=19
கிளப்புக்கும் 60 புள்ளிகள் அபராதம்!
இந்த விவகாரத்தில் வீரருக்கு மட்டுமின்றி சால்ட்பர்ன் கிரிக்கெட் கிளப்பின் இரண்டாவது அணிக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சர்ச்சை எழுவதற்கு முன்பு நார்த் யார்க்ஷயர் மற்றும் சவுத் டர்ஹாம் லீக்கில் முன்னிலையில் இருந்த அந்த அணி, தற்போது தானாகவே மூன்றாவது டிவிஷனுக்கு தரமிறக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 2027 சீசனை 60 புள்ளிகள் கழிக்கப்பட்ட நிலையிலேயே அந்த அணி தொடங்க வேண்டும்.
இதனால் மீண்டும் மேலேறுவதற்கான வாய்ப்பு அந்த அணிக்கு மிகவும் கடினமாகியுள்ளது. இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொண்ட சால்ட்பர்ன் கிளப், ஒழுங்கு நடவடிக்கை விசாரணையில் முழுமையாகப் பங்கேற்றதாகவும், 2027 சீசனுக்கான தயாரிப்புகளில் கவனம் செலுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, 2018-ம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோருக்கு தலா 12 மாதங்கள் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், உள்ளூர் கிரிக்கெட்டில் நடந்த ஒரு சம்பவத்திற்காக இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தி கிரேடு கிரிக்கெட்டர் நிகழ்ச்சியின் சாம் பெர்ரி மற்றும் இயான் ஹிக்கின்ஸ், ஒரு உள்ளூர் கிரிக்கெட் வீரரின் செயலுக்கு எதிராக எழுந்த விமர்சனங்கள் அளவுக்கு அதிகமாகிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக, பியர்ஸ் மோர்கன் போன்றவர்கள் அவரை கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகப்பெரிய ஏமாற்றுக்காரர் என்று விமர்சித்தது தேவையற்ற அளவிலான எதிர்வினையை உருவாக்கியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

