துலீப் கோப்பை இறுதிப்போட்டியில் தெற்கு மண்டல அணியின் கேப்டன் திலக் வர்மா சிறப்பாக விளையாடி 211 பந்துகளில் 99 ரன்கள் எடுத்தார். ஆனால் சதத்தை நெருங்கிய நேரத்தில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் முதல் தர கிரிக்கெட்டில் தனது ஒன்பதாவது சதத்தை பதிவு செய்யும் வாய்ப்பை அவர் தவறவிட்டார்.
திலக் வர்மாவின் ஆட்டத்தால் தெற்கு மண்டலம் 336 ரன்களை எடுத்தது. ஆனால் கிழக்கு மண்டலம் முதல் இன்னிங்ஸில் 708 ரன்கள் குவித்திருந்ததால், தெற்கு மண்டலம் 372 ரன்கள் பின்தங்கியது. இருந்தாலும் நீண்ட நேரம் களத்தில் நின்று விளையாடிய திலக், டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற தனது ஆசையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்.
“இந்த ரன் முக்கியமானது. ஆனால் அணிக்கு என்ன தேவையோ அதில்தான் என் கவனம் இருந்தது. சதம் கிடைத்திருந்தால் அது நான் செய்த கடின உழைப்புக்கான நல்ல பரிசாக இருந்திருக்கும். ஆனால் தனிப்பட்ட சாதனைகளை விட அணியின் முடிவுதான் முக்கியம்” என்று திலக் வர்மா தெரிவித்துள்ளார்.

