இந்திய அணியின் சமீபத்திய தேர்வுகள் குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத், சில வீரர்களின் தேர்வு குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக வாஷிங்டன் சுந்தருக்கு அணியில் நல்ல ஆதரவு கிடைத்து வருவதாகக் கூறிய அவர், அந்த வாய்ப்பை வாஷிங்டன் சுந்தர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், நிதீஷ் குமார் ரெட்டியின் தேர்வு குறித்து தனக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லை என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய பத்ரிநாத், “கோச்சின் ஃபேவரிட் பிளேயர்ஸ் மீண்டும் வந்துவிட்டார்கள். வாஷிங்டன் சுந்தருக்கு நல்ல பேக்கிங் கிடைக்கிறது, அதை அவர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நிதீஷ் குமார் ரெட்டி ஒரு பேட்ஸ்மேன் மட்டுமே; அவர் சிறந்த பவுலர் கிடையாது. அதனால் அவரது தேர்வை நான் பெரிய அளவில் மதிப்பிடவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஜஸ்ப்ரீத் பும்ரா மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியிருப்பது மிகப்பெரிய பாசிட்டிவ் விஷயம் என்றும் பத்ரிநாத் கூறியுள்ளார். நீண்ட நாட்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்ததால், அணியில் இடம்பெறுவதற்கு முன்பு பும்ரா அணி நிர்வாகத்துடன் பேசியிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், சஞ்சு சாம்சன் மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருப்பது தனக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் சுப்பிரமணியம் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.

