நேற்று குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மைதானத்தில் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தார். பேட்டிங் செய்து கொண்டு இருந்தபோது திலக் வர்மாவிடம் மிகவும் கோபமாக ஏதோ கத்திக் கொண்டு இருந்தார். போட்டிக்கு பிறகு அவர் இதற்கு விளக்கம் அளித்திருக்கிறார்.
இந்த போட்டியில் 14வது ஓவர் முடிந்த பொழுது இடைவேளை எடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் திலக் வர்மா 22 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். அப்போது அவருடன் இணைந்து பேட்டிங் செய்த கேப்டன் ஹர்திக் பாண்டியா அவரிடம் ஏதோ ஆவேசமாக கத்தி கத்தி பேசிக் கொண்டிருந்தார்.
இதற்குப் பிறகு உத்வேகம் அடைந்த திலக் வர்மா அடுத்த 23 பந்துகளில் 81 ரன்கள் குவித்து 45 பந்துகளில் சதமும் அடித்து அணியின் ஸ்கோரை 199 என்று கொண்டு சென்றார். இதைத் தொடர்ந்து விளையாடிய குஜராத் நூறு ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆக மும்பை அணி 99 ரன் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.
இது குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா கூறும் போது “நான் திலக் வர்மாவிடம் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தது என்னவென்றால், அவர் பந்தை பார்த்து அது எப்படி இருந்தாலும் அடிக்க வேண்டும் என்றுதான். அவருக்கு அபாரமான முறையில் பந்தை அடிக்கும் திறமை இருக்கிறது. மேலும் அவருக்கும் எனது அணிக்கும் ஆற்றலை உருவாக்க நான் கத்த வேண்டி இருந்தது. அப்படி நான் கத்தி கத்தி எனக்கு மயக்கமே வந்துவிட்டது” என்று கூறி இருக்கிறார்.

