இந்திய கிரிக்கெட்டின் மிக முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஜாகிர் கான். இப்போதுள்ள நவீன கிரிக்கெட்டில் வேண்டுமானால் பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது சாமி, சிராஜ் என நட்சத்திர பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இருக்கலாம்.
ஆனால் 90களில் இந்திய பவுலிங் யூனிட்டுக்கு தலைமை தாங்கியவர் என்றால் அது ஜாகிர் கான் மட்டுமே. சௌரவ் கங்குலியால் அடையாளப்படுத்தப்பட்டு இந்திய அணிக்குள் நுழைந்தார். இவரது ஸ்விங் பந்துவீச்சினால் எதிரணி பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவரையும் திணறடிக்கக் கூடியவர். மேலும் இவர் இடது கை பந்துவீச்சாளர் என்பதால் பந்துகளை துல்லியமாகவும், நேர்த்தியாகவும் வீசுவதில் தனித்திறமை படைத்தவர்.
அப்போதுள்ள சிறுவர்கள் இவரது பந்துவீச்சை பார்த்துதான் பவுலிங் பழகிக் கொண்டார்கள் என்று கூட சொல்லலாம். இந்தியாவின் பந்துவீச்சு யூனிட்டுக்கு பல வருடங்கள் தனியாக தலைமை தாங்கியவர். சௌரவ் கங்குலியின் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், எம்எஸ் தோனி காலத்தில்தான் ஜாஹிர் கானின் கிரிக்கெட் பயணம் மிக நீண்டதாய் அமைந்திருக்கிறது.
2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணி உலகக் கோப்பை வெற்றி பெற பந்துவீச்சில் மிக முக்கியக் காரணமாய் திகழ்ந்தவர். உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்தியவரின் பட்டியலில் இவர்தான் முதலிடத்தில் இருந்தார். தற்போதைய இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது அந்த அணியின் ஜாம்பவான் ஆண்டர்சன் “தான் ஸ்விங் பந்துவீச்சை ஜாஹிர் கானிடமிருந்தே கற்றுக் கொண்டேன்” என்பதையும் வெளிப்படையாக கூறியுள்ளார்.
அந்த அளவிற்கு இவரது புகழ் காலத்திற்கும் நின்று பேசும். இப்படி இருக்கையில் பொதுவாக கிரிக்கெட் வீரர்களுக்கு 15 முதல் 20 ஆண்டுகள் வரை கிரிக்கெட் விளையாடிவிட்டு அடுத்தது வாழ்க்கையில் என்ன செய்வது என்று தெரியாமல் சற்று குழப்பம் அடையும் சூழ்நிலை வரும். ஒன்று கிரிக்கெட் சார்ந்த ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுப்பார்கள். அல்லது கிரிக்கெட்டை விட்டு வேறு வகையான விஷயங்களிலும் ஆர்வம் காட்டுவார்கள். இதுகுறித்து இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் மகேந்திர சிங் தோனி இந்த இரண்டையுமே சரியாக கையாண்டிருக்கிறார் என்று கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில்
“நீங்கள் கிரிக்கெட் விளையாடும் காலகட்டத்தில் அதை விட்டு வெளியேவும் கவனம் செலுத்துவது மிக முக்கியமானது. உலகத்தின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டை தாண்டி அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பம் அடைவார்கள். காரணம் அவர்கள் விளையாட்டிற்காக தங்களை முழுவதுமாக அர்ப்பணித்து இருப்பார்கள்.
ஆனால் மகேந்திர சிங் தோனி இதில் சற்று வித்தியாசமானவராக இருப்பார். அவருக்கு கிரிக்கெட் மீது மிகப்பெரிய காதல் இருந்தது. ஆனால் கிரிக்கெட் மட்டும் முக்கியமில்லை, அதைத் தாண்டியும் வாழ்க்கை இருக்கிறது என்பதை நன்கு புரிந்து கொண்டார். தோனிக்கு பைக்குகள் மீது உயிரையே கொடுக்கும் அளவிற்கு மிகப்பெரிய காதல் இருந்தது. விளையாடும் காலகட்டத்திலேயே அவர் பைக்குகள் மீது ஏதாவது ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பார். இரண்டையும் சரியான விகிதத்தில் கையாண்டார்” என்று கூறியிருக்கிறார்.

