இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டராக விளங்கியவர் யுவராஜ் சிங். 2000 ஆண்டில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் 19 வயது இளைஞராக இந்திய அணிக்கு அறிமுகம் ஆன இவர் 2007 ஆம் வருட டி20 உலக கோப்பை மற்றும் 2011 ஆம் வருட 50 ஓவர் உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வெல்ல முக்கிய காரணமாக அமைந்தவர். 2019 ஆம் வருடம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். யுவராஜ் சிங் ஓய்வை அறிவிப்பதற்கு தோனி தான் முக்கிய காரணம் என அவரது தந்தை யோக்ராஜ் சிங் நீண்ட நாட்களாக குற்றம் சாட்டி வருகிறார். தற்போது தோனியை எப்போதும் மன்னிக்க மாட்டேன் என்று அவர் அளித்திருக்கும் பேட்டி கிரிக்கெட் வட்டாரங்களில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இந்திய அணியின் நட்சத்திர வீரராக விளங்கிய யுவராஜ் சிங் 2011 ஆம் வருட உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகு எடுத்துக்கொண்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கேன்சர் நோய் இருப்பது கண்டறியப்பட்டது இதனைத் தொடர்ந்து அமெரிக்கா சென்று கேன்சர் நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு இந்தியா திரும்பினார். பின்னர் 2013 ஆம் வருடம் முதல் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தொடங்கினார் யுவராஜ் சிங். எனினும் அவருக்கு முன்பு போல் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. 2015 ஆம் வருட 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2019 ஆம் வருட 50 ஓவர் உலகக் கோப்பைகளிலும் யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக யுவராஜ் சிங் அறிவித்தார்.
இந்நிலையில் யுவராஜ் சிங்கின் தந்தையும் இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டருமான யோக்ராஜ் சிங் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோது யுவராஜ் சிங்கிற்கு போதுமான வாய்ப்புகள் வழங்கவில்லை என குற்றம் சாட்டினார். எம்.எஸ் தோனி, யுவராஜ் சிங்கிற்கு ஆதரவு அளித்திருந்தால் யுவராஜ் சிங் இந்திய அணிக்காக 4 முதல் 5 ஆண்டுகள் விளையாடி இருப்பார் எனவும் யோக் ராஜசிங் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளித்த யோக்ராஜ் சிங் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை தன்னுடைய வாழ்நாளில் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன் என தெரிவித்திருந்தார். தனது மகன் யுவராஜ் சிங் கிரிக்கெட் வாழ்க்கையை மகேந்திர சிங் தோனி நாசம் செய்து விட்டார் எனவும் குறிப்பிட்டு இருந்தார். தோனி, யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பளித்திருந்தால் யுவராஜ் சிங் மேலும் 4 முதல் 5 ஆண்டுகளுக்கு இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடி இருப்பார் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
அவரது பேட்டி கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்திய அணிக்காக 3 ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டனை முன்னாள் கிரிக்கெட் வீரர் இவ்வாறு விமர்சனம் செய்யலாமா.? எனவும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் தனது தந்தை குறித்து யுவராஜ் சிங் பேசி இருந்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது . அந்த வீடியோவில் பேசிய யுவராஜ் சிங் தனது தந்தைக்கு மனநிலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டிருப்பதாக கருதுகிறேன் என தெரிவித்திருக்கிறார்.
சில விஷயங்களை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் எனது தந்தை அவற்றை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். அதுதான் அவரது பிரச்சனை எனவும் யுவராஜ் சிங் அந்த வீடியோவில் பேசியிருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கிரிக்கெட் விளையாடிய காலகட்டங்களில் யுவராஜ் சிங் மற்றும் மகேந்திர சிங் தோனி இருவரும் ஆடுகளத்தில் நல்ல நண்பர்களாக செயல்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் 2015 ஆம் வருட உலகக் கோப்பை போட்டிக்கு இந்திய அணியின் மூத்த வீரர்களான கௌதம் கம்பீர் ஹர்பஜன் சிங் மற்றும் யுவராஜ் சிங் போன்ற வீரர்களை அப்போது கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி அணியில் சேர்க்காமல் ஓரம் கட்டினார் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தது.

