2023 ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் 13 வது உலகக் கோப்பைக்கு தேசமே முழு வீச்சுடன் தயாராகி வருகிறது . இந்த வருட உலகக் கோப்பை முதல் முறையாக இந்தியாவில் வைத்து 45 நாட்கள் நடைபெற இருக்கிறது. அக்டோபர் ஐந்தாம் தேதி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியுடன் தொடங்கும் உலகக் கோப்பை நவம்பர் 19ஆம் தேதி இறுதிப் போட்டியுடன் முடிவடைய இருக்கிறது.
உலகக்கோப்பையை பற்றிய கருத்துக்கணிப்புகள் மற்றும் அணிகளின் பலங்கள் மற்றும் பலவீனங்களை விமர்சகர்கள் மற்றும் முன்னால் கிரிக்கெட் வீரர்கள் தற்போதையிலிருந்து அலசி ஆராய துவங்கி விட்டனர். இந்த உலகக் கோப்பையில் எந்த வீரர் அதிக ரன்களை எடுப்பார்?எந்தப் பந்துவீச்சாளர் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவார்? எந்த அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் போன்ற அனுமானங்களையும் கருத்துக்களையும் கிரிக்கெட்டின் ஓய்வு பெற்ற ஜாம்பவான்கள் சமூக வலைதளங்கள் மூலமாகவும் ஊடகங்கள் மூலமாகவும் முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான பிராட் ஹாக் 2023 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு சவாலாக இருக்கக்கூடிய அணி எது என்பது பற்றி தனது கருத்தை ரெவ் ஸ்போர்ட்ஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அவரது கருத்துப்படி ஆஸ்திரேலியா அணியால் மட்டுமே இந்தியாவை தோல்வியடையச் செய்து உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்ற முடியும் என தெரிவித்திருக்கிறார். அதற்கான காரணங்களாகவும் அவர் சில காரணங்களை குறிப்பிட்டு காட்டி இருக்கிறார்.
இது தொடர்பாக அந்த ஊடகத்திற்கு பிராட் ஹாக் அளித்திருக்கும் பேட்டியில்” ஆஸ்திரேலிய அணியிடம் சிறந்த வேகப்பந்து வீச்சு தாக்குதல் இருக்கிறது. மேலும் அந்த அணியின் முன்னணி வேகுபந்துவீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் புதிய பந்தின் மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு விக்கெட் களை வீழ்த்தி கொடுக்கக் கூடிய திறமை பெற்றவர். அந்த அணியின் சுழற் பந்து வீச்சாளரான ஆதம் ஜாம்பா மிடில் ஓவர்களில் கட்டுப்பாடாக பந்து வீசுவதோடு விக்கெட்டுகளையும் வீழ்த்த கூடியவர் மேலும் ஆஸ்திரேலியா அணியானது சம பலம் பெற்று இருப்பதோடு நீண்ட பேட்டிங் வரிசையும் கொண்டிருக்கிறது” என தெரிவித்திருக்கிறார்.
மேலும் இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் ” என்னை பொருத்தவரை ஆஸ்திரேலியா அணியால் மட்டும் தான் இந்தியாவை உலக கோப்பையில் இருந்து வெளியேற்ற முடியும் . சமீபத்தில் ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்திருக்கிறது. மேலும் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரையும் கைப்பற்றி உத்வேகத்துடன் இருக்கிறது” என தெரிவித்திருக்கிறார்.
இந்திய அணி தொடர்பாக தனது கருத்தை பதிவு செய்திருக்கும் பிராட் ஹாக்” இந்திய அணி வலுவாக இருந்தாலும் அவர்களது மிடில் ஆர்டரில் ஒரு சில சிக்கல்கள் இருக்கின்றன . இந்திய அணி நிர்வாகம் ஸ்ரேயாஸ் ஐயரை உலகக் கோப்பையில் விளையாட வைக்குமா? கேஎல் ராகுல் முழு உடற்பகுதி பெற்று இந்த உலகக் கோப்பையில் விளையாடுவாரா? அணியின் பிரதானமான விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இல்லாததால் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் பணிகளையும் செய்ய வேண்டி இருக்கிறது. இந்தியாவின் நடு வரிசை ஆட்டக்காரர்கள் யார் என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். ரவீந்திர ஜடேஜா மிடில் ஆர்டரில் விளையாடுவாரா? இந்திய அணி சார்துல் தாக்கூரை ஆடும் லெவனில் எடுப்பார்களா?” என பல்வேறு கேள்விகளை முன் வைத்திருக்கிறார்.
2007 ஆம் ஆண்டிற்கு பிறகு நடந்த மூன்று உலகக் கோப்பை போட்டிகளிலும் உலகக் கோப்பையை நடத்திய நாடுகளே கோப்பையை வென்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 2011 ஆம் ஆண்டில் இந்தியா 2015 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா மற்றும் 2019 ஆம் ஆண்டில் இங்கிலாந்து என உலகக் கோப்பையை நடத்திய நாடுகள் தான் கடந்த மூன்று முறை சாம்பியன் ஆகி இருக்கின்றன. இதனால் இந்திய அணி இந்த வருட உலக கோப்பையை கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து இருக்கின்றனர். மேலும் உள்நாட்டு ஆடுகளங்களில் ஆடுவது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும். ஆனால் ஐபிஎல் காரணமாக ஹோம் அட்வாண்டேஜ் இந்தியா இழந்திருப்பதாக சமீபத்தில் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்திருந்தார்.

