தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் ஆட்டங்கள் நேற்றோடு முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த ஆட்டங்களில் 9 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்தியா 18 புள்ளிகளுடன் முதல் இடத்தில் முடித்திருக்கிறது. வருகின்ற 15-ம் தேதி நடைபெற இருக்கும் அர இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை சந்திக்க இருக்கிறது இந்திய அணி.
நேற்றைய போட்டியில் இந்திய அணியின் டாப் பார்டர் வீரர்கள் அனைவரும் 50 ரன்களுக்கு மேல் எடுத்து சாதனை படைத்தனர். மேலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் வரலாற்றில் இந்திய அணியின் முதல் 5 வீரர்கள் 50 பிளஸ் ஸ்கோர் எடுப்பது இதுவே முதல்முறை. ரோஹித் சர்மா கில் மற்றும் விராட் கோலி ஆகியோர் அரை சதம் எடுக்க ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் சதம் எடுத்தனர்.
அதிலும் ராகுல் 62 பந்துகளில் சதம் எடுத்து உலகக் கோப்பை போட்டிகளில் அதிவேக சதம் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இந்திய அணிக்காக துவக்க வீரராக செயல்பட்டு வந்த கேஎல் ராகுல் 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு இந்திய அணிக்காக நான்காவது இடத்தில் ஆட வைக்கப் பட்டார். நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடர்களில் சிறப்பாக விளையாடிய அவர் 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் நான்காவது வீரராக களம் இறங்கினார்.
எனினும் தவானுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த உலகக் கோப்பையில் துவக்க வீரராக மீண்டும் களம் இறக்கப்பட்டார் ராகுல். இந்த வருட உலகக் கோப்பைக்கு முன்பாக கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட கார் விபத்தில் ரிஷப் பன்ட் படுகாயம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவர் உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கே எல் ராகுல் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்படுவதோடு ஐந்தாவது இடத்திலும் பேட்டிங் செய்து வருகிறார். இந்த இடத்தில் அவரது செயல்பாடு சிறப்பாக இருக்கிறது. மேலும் ஐந்தாவது வீரராக களம் இறங்கி 50+ சராசரியும் வைத்திருக்கிறார்.
பாகிஸ்தானின் ஏ ப்ளஸ் என்ற தொலைக்காட்சியில் தி ஃபெவிலியன் ஷோ என்ற கிரிக்கெட் நிகழ்ச்சி உலகக் கோப்பையை முன்னிட்டு நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு பேசியிருக்கும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் தற்போதைய உலகின் மிகச் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் என தனது கருத்தை பதிவு செய்து இருக்கிறார். வாசிம் அக்ரம், மிஸ்பா மற்றும் மொயின் கான் ஆகியோரும் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசிய அவர் ராகுலை வெகுவாக பாராட்டி உள்ளார்.
இது தொடர்பாக தனது கருத்தை பதிவு செய்திருக்கும் மாலிக் ” தற்போது ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்வதில் உலகின் சிறந்த பேட்ஸ்மனாக கருதப்படும் கிளாசன் சிறப்பாக செயல்படுவதற்கு நல்ல ஒரு அடித்தளம் தேவைப்படுகிறது. ஆனால் ராகுல் எந்த மாதிரியான சூழ்நிலையில் களமிறங்கினாலும் அணிக்கு தேவையானதை சிறப்பாக செய்கிறார். ஆஸ்திரேலியா அணியுடன் போட்டியில் இரண்டு ரன்கள் மூன்று விக்கெட்டுகள் இந்தியா இழந்திருந்தபோது விராட் கோலி உடன் அருமையான பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். நேற்றைய போட்டியில் நல்ல அடித்தளம் கிடைத்ததும் அதிரடியாக விளையாடி இந்திய அணி மிகச் சிறந்த ஒரு ஸ்கோரை எடுப்பதற்கு உதவினார்” என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” அவரால் ஒரு ஆட்டத்தை ஃபினிஷ் செய்யவும் முடியும். மேலும் சூழ்நிலைக்கு ஏற்ப தனது இன்னிங்ஸை பில்ட் செய்யும் திறமையும் அவருக்கு இருக்கிறது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவும் சிறப்பான ஆட்டத்தை கொண்டிருக்கிறார். சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவும் சிறப்பாக விளையாடுகிறார். அவரால் அதிரடியாகவும் விளையாட முடிகிறது. மேலும் களத்தில் இருக்கும் ஃபீல்டுக்கு ஏற்ப ஷாட் டுகள் விளையாடும் திறமையும் அவரிடம் இருக்கிறது. ஒரு பந்துவீச்சாளராக இவரை போன்ற வீரர் செட்டில் ஆகிவிட்டால் அவரை அவுட் செய்வது மிகவும் கடினம். எனவே இந்த உலகக் கோப்பையில் மிகச் சிறந்த மிடில் ஆர்டர் வீரர் ராகுல் தான்” என சோயப் மாலிக் தெரிவித்துள்ளார்

