13 வது உலகக்கோப்பை தொடரின் முதலாவது அறை இறுதிப் போட்டி நாளை மும்பையில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத இருக்கின்றன. இதற்காக இரண்டு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது.
முன்னதாக நடைபெற்ற லீக் போட்டிகளின் முடிவில் இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. நியூசிலாந்து அணி 5 வெற்றிகள் உடன் 10 புள்ளிகள் பெற்று நான்காவது அணியாக அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. கடந்த சில ஐசிசி தொடர்களின் முக்கிய போட்டிகளில் நியூசிலாந்து இந்தியாவை தோற்கடித்திருப்பதால் இந்திய அணி இந்த முறை நிச்சயமாக பதிலடி கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
பரபரப்பான இந்தப் போட்டி நாளை மதியம் 2:00 மணிக்கு நடைபெற உள்ளது. இந்திய அணி என்ற தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி வந்தாலும் கடந்த உலகக் கோப்பை போட்டிகளில் நாக் அவுட் சுற்றில் தோல்விகளை சந்தித்து இருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியுடன் தோல்வி அடைந்தது. மேலும் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி இடம் தோல்வியை தழுவியது.
இதனை இந்தியா நாளைய போட்டியில் மாற்றும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடமும் கிரிக்கெட் விமர்சகர்களிடமும் இருக்கிறது. இந்நிலையில் போட்டிக்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இந்திய அணியின் மிஸ்டர் 360 டிகிரி சூரியகுமார் யாதவ் பற்றி பேசி இருக்கிறார். மேலும் நியூசிலாந்து அணியின் திட்டங்கள் குறித்தும் போட்டியை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பது குறித்தும் விரிவாக பேசியிருக்கிறார்.
இது தொடர்பாக பேசியிருக்கும் வில்லியம்சன் ” இந்த தருணம் மிகவும் சிறப்பான ஒன்று. நிறைய அணிகளுக்கு இது போன்ற மைதானத்தில் முக்கியமான போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைப்பதில்லை. நாங்கள் இந்த போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இது ஒரு சவாலான போட்டி. இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. எனினும் கிரிக்கெட்டில் போட்டி நடைபெறும் நாள் எப்படி அமைகிறதோ அதை பொறுத்துதான். நாங்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம்” என தெரிவித்தார்.
சூரியகுமார் யாதவ் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கையில் ” சூரியகுமார் ஒரு சிறப்பான வீரர். அவர் ஒரு சிறந்த ஸ்ட்ரோக் மேக்கர். மேலும் இது அவரது சொந்த ஆடுகளம். இந்த ஆடுகளத்தை பற்றி நன்றாக அறிந்து வைத்திருக்கிறார். எனினும் நாங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று எங்களது கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்த விரும்புகிறோம்” என தெரிவித்திருக்கிறார்.
மேலும் நியூசிலாந்து அணியில் காயமடைந்த மேட் ஹென்றிக்கு பதில் இடம் பெற்றிருக்கும் கைல் ஜெமிசன் இடம் பெறுவாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த வில்லியம்சன்” எந்த வீரர்களுடன் விளையாட இருக்கிறோம் என்பதை ஆடுகளத்தை பார்த்த பிறகு முடிவு செய்வோம். மேட் ஹென்றி ஒரு அற்புதமான வீரர். அவருக்கு காயம் ஏற்பட்டது துரதிஷ்டவசமானது. அவர் அணியில் இருக்கும் போது நாங்கள் ஒரு கம்பீரமான அணியாக இருந்தோம்” என தெரிவித்துள்ளார் வில்லியம்சன்.

