குஜராத் மாநில கிரிக்கெட் சங்கம் சார்பாக பள்ளிகளுக்கு இடையேயான 19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் துரோன் தேசாய் என்ற வீரர் 498 ரன்கள் குவித்து சாதனை படைத்திருக்கிறார். இதன் மூலம் இந்திய அணியின் வீரர் பிரத்வி ஷா சாதனை நூல் நிலையில் தப்பி இருக்கிறது.
குஜராத்தில் அம்மாநில கிரிக்கெட் சங்கம் சார்பாக அகமதாபாத் நகர கிரிக்கெட் போர்டு பள்ளிகளுக்கு இடையேயான திவான் பல்லுபாய் கோப்பை அண்டர் 19 கிரிக்கெட் டோர்னமெண்ட் நடத்தி வருகிறது. இந்தத் தொடரில் செயிண்ட் சேவியர் லயோலா பள்ளி மற்றும் ஜேஎல் ஆங்கிலப்பள்ளி அணிகள் மோதிய போட்டி அகமதாபாத் நகரின் சிவாய் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த செயின்ட் சேவியர் பள்ளி அணி 712 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அந்த அணியின் 18 வயது வீரர் துரோன் தேசாய் மிகச் சிறப்பாக விளையாடி 320 பந்துகளில் 498 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவரது இந்த சிறப்பான இண்ணிங்ஸில் 7 சிக்ஸர்களும் 86 பவுண்டரிகளும் விலாசினார். மேலும் 2 ரன்களில் 500 ரன்கள் எட்டும் வாய்ப்பை இழந்தார். இந்த ஒரு இன்னிங்ஸ் மூலம் நாடு முழுவதும் இவரது பெயர் பிரபலம் அடைந்திருக்கிறது. இதற்கு முன்பு குஜராத் மாநில அண்டர் 14 அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் தேசாய். இவரது இந்த ஆட்டத்தின் மூலம் குஜராத் அண்டர் 19 அணிக்கு தேர்வாகும் வாய்ப்பு பிரகாசமாகி இருக்கிறது.
மேலும் பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் தனது பெயரையும் இணைத்து இருக்கிறார் தேசாய். இந்தப் பட்டியலில் மும்பையைச் சேர்ந்த வீரர்களே பெரும்பாலும் இடம் பெற்று வந்த நிலையில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தேசாய் தனது பெயரையும் பதித்திருக்கிறார். பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகளில் மும்பையைச் சேர்ந்த பிரணவ் தனவாடே அவுட் ஆகாமல் 1009 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.
இவரைத் தொடர்ந்து ப்ரீத்விஷா 546 ரன்கள் உடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். டாக்டர் ஹவேவாலா 515 ரன்கள் எடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக சமன்லால் அவுட் ஆகாமல் 506 ரன்கள் உடன் நான்காம் இடம் பெற்றுள்ளார். அர்மான் ஜாபர் மற்றும் துரோன் தேசாய் ஆகியோர் 498 ரங்கள் எடுத்து ஐந்தாம் இடத்தில் உள்ளனர். மேலும் தனது அருமையான ஆட்டத்திற்கு பிறகு பேசிய தேசாய் 500 ரன்கள் எடுக்கும் வாய்ப்பை தவறவிட்டதற்கு வருத்தம் தெரிவித்தார்.
மைதானத்தில் ஸ்கோர் போர்டு இல்லாததால் 498 ரன்களில் விளையாடிக் கொண்டிருக்கிறேன் என்பது தெரியாமல் அதிரடியாக விளையாடி அவுட் ஆனதாக தெரிவித்திருக்கிறார். இந்தியாவின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரை பார்த்து கிரிக்கெட் மீது ஆர்வம் வந்ததால் சிறு வயது முதலே கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு விளையாடி வருவதாக தெரிவித்திருக்கிறார். மேலும் எட்டாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தேர்வுகளுக்கு மட்டுமே பள்ளிக்கு செல்வதாக கூறிய அவர் ஒரு நாள் நிச்சயமாக இந்திய அணியில் இடம் பெறுவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

