தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் இந்திய அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 7 போட்டிகளில் விளையாடி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. மேலும் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 302 கண்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று உலக சாதனையும் படைத்தது.
இந்நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சு தொடர்பாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஹசன் ராசா சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருந்தார் . இது தொடர்பாக பாகிஸ்தானில் நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இந்திய அணியினர் பந்து வீசும் போது பயன்படுத்தப்படும் பந்துகள் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்திருந்தார். நடுவர்கள் மற்றும் பிசிசிஐ இந்திய அணிக்கு சாதகமான பந்துகளை வழங்குகிறது என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக இந்திய அணி பயன்படுத்தும் பந்துகள் ஆய்வு செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக சிராஜ் மற்றும் சமி ஆகியோர் பந்து வீசுவது ஆலன் டொனால்ட் மற்றும் நீடினி ஆகியோர் சவுத் ஆப்பிரிக்க ஆடுகளங்களில் பந்து வீசுவது போன்று இருக்கிறது என தெரிவித்திருந்த அவர் அவர்களது பந்துவீச்சை பேட்ஸ்மேன்களால் விளையாடவே முடியவில்லை. ஆனால் மற்ற அணியின் பந்துவீச்சாளர்களால் இதுபோன்று பந்து வீச முடிவதில்லை. எனவே இந்திய அணி பயன்படுத்தும் பந்துகள் குறித்து ஆய்வு செய்யப்படுவதோடு அவற்றின் மீது விசாரணையும் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார் .
பாகிஸ்தான் வீரரின் இந்த ஆதரவற்ற குற்றச்சாட்டிற்கு அந்த அணியின் முன்னாள் கேப்டனும் சுல்தான் ஆப் ஸ்வீங் என அழைக்கப்படும் வாசிம் அக்ரம் கடுமையான பதிலடி கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக ஸ்போர்ட்ஸ் சேனலில் பேசி இருக்கும் அவர் இதுபோன்று குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களுக்கு அறிவு என்று ஒன்று இருக்கிறதா.? எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார். வாசிம் அக்ரம் பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வேகப்பந்து வீச்சில் ரிவர்ஸ் ஸ்விங் கலையை கற்றுத் தேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஹசன் ராசாவின் குற்றச்சாட்டு குறித்து பேசிய வாசிம் அக்ரம் ” கடந்த சில தினங்களாக இது குறித்த செய்திகளை படித்து வருகிறேன். இதை பார்ப்பதற்கே வேடிக்கையாக இருக்கிறது. இதிலிருந்து அவர்களது அறிவு எந்த அளவில் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. இதுபோன்ற கருத்துக்களை கூறுவதன் மூலம் உலக அரங்கில் நம்மையே அசிங்கப்படுத்துகிறார்கள். இது போன்ற கருத்துக்களால் உங்களை நீங்களே அசிங்கப்படுத்துவதோடு உலக அரங்கிலும் நமது நாட்டை தலைகுனிய வைக்கிறீர்கள் என கடுமையாக தனது கண்டனத்தை பதிவு செய்து இருக்கிறார்.
நடப்பு உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி மிகுந்த எதிர்பார்ப்புடன் கலந்து கொண்டது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பின்னர் அந்த அணி தொடர்ச்சியாக இந்தியா ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளிடம் தோல்வியை சந்தித்து நெருக்கடிக்கு உள்ளானது. இதனைத் தொடர்ந்து பங்களாதேஷ் அணியுடன் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று அரை இறுதி வாய்ப்பு தக்க வைத்துக் கொண்டது.
இன்று அந்த அணி நியூசிலாந்து அணியுடன் பெங்களூரில் வைத்து விளையாடி வருகிறது. இந்தப் போட்டி பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள மிகவும் முக்கியமான போட்டியாகும். இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தால் பாகிஸ்தான் அணி உலக கோப்பையில் இருந்து வெளியேற நேரிடும் . இந்தப் போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவர்களில் 401 ரன்கள் எடுத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஆடிவரும் பாகிஸ்தான் ஆறு ஓவர்களில் 32 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்துள்ளது.

