2025 ஆம் வருடத்தின் சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. மேலும் சாம்பியன் டிராபி தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றிருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் விமர்சிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
முன்னதாக 2025 ஆம் வருட சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்திய அணி பாகிஸ்தான் சென்று ஆட மறுத்ததால் இந்தியா கலந்து கொள்ளும் போட்டிகள் மட்டும் துபாய் நாட்டில் வைத்து நடைபெறும் என ஐசிசி அறிவித்தது. மேலும் இந்திய அணி லீக் போட்டிகளில் வெற்றி பெற்று அரை இறுதி போட்டிக்கு முன்னேறியதால் அந்தப் போட்டிகளும் துபாய் நகருக்கு மாற்றப்பட்டன. இந்நிலையில் இந்தியா இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றதால் சாம்பியன் டிராபி தொடரின் பைனல் துபாயில் வைத்து நடைபெற்றது.
கடந்த 2024 ஆம் வருடம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையையும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் இந்திய அணி ஐசிசி போட்டி தொடர்களிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. மேலும் ஐசிசி தொடர்களில் 24 போட்டிகளில் விளையாடியிருக்கும் இந்திய அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியடைந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி தனது போட்டிகளை துபாயில் விளையாடுவது குறித்து பல்வேறு நாட்டு வீரர்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசி வந்தனர். இந்திய அணி துபாய் மைதானத்தில் விளையாடுவது அவர்களுக்கு மிகவும் சாதகமானது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்களும் தற்போதைய வீரர்களும் விமர்சித்தனர். மேலும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், இந்தியா ஒரே இடத்தில் விளையாடுவது அவர்களுக்கு மிகவும் சாதகமான ஒன்றாக அமைந்திருக்கிறது என குற்றம் சாட்டி இருந்தார்.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் வேக பந்து வீச்சாளரான ஆன்டி ராபர்ட்ஸ், ஐசிசி மற்றும் பிசிசிஐ அமைப்பை கடுமையாக விமர்சித்திருக்கிறார். மேலும் ஐசிசி எப்போதும் இந்தியாவிற்கு சாதகமாகவே செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். இந்திய அணியின் கோரிக்கைகளை நிராகரிக்கும் தைரியமும் ஐசிசிக்கு வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் “ஐசிசி என்பது இந்தியா கிரிக்கெட் போர்டு என்று நினைக்கிறேன். ஏனென்றால் சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்தையும் இந்தியாவே முடிவு செய்கிறது. நாளை நோபால் மற்றும் வைட் பந்துகள் வேண்டாம் என்று இந்தியா கூறினால் அதை எவ்வாறு செயல்படுத்துவது என ஐசிசி யோசிக்க தொடங்குமோ.? என்ற பயம் எனக்கு வருகிறது” என தெரிவித்திருக்கிறார்.
மேலும் ஐசிசி தொடர்ந்து பிசிசிஐ அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா ஒரே இடத்தில் விளையாடியது அவர்களுக்கு சாதகமாக அமைந்தது. இதே போல கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரிலும் பார்வை நேரம் காரணமாக இந்தியா விளையாடிய அரை இறுதி போட்டியை பகல் நேர ஆட்டமாக ஐசிசி நடத்தியது இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது எனவும் ராபர்ட்ஸ் குற்றம் சாட்டியிருக்கிறார்.

