ஐபிஎல் தொடர் 9 நாட்களுக்கு பின் மீண்டும் இன்று தொடங்கி இருக்கிறது. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக மே 8ம் தேதியுடன் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டன. இதன்பின் வெளிநாட்டு வீரர்கள் பலரும் சொந்த ஊர் பறந்த நிலையில், போர் பதற்றம் தணிந்த பின் ஐபிஎல் தொடருக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டது.
மழை வைத்த ட்விஸ்ட்
இதன்பின் இன்று ஆர்சிபி – கேகேஆர் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தொடங்க இருந்தது. ஆனால் மாலை முதலே பெங்களூர் முழுக்க கனமழை பெய்து வந்தது. இதனால் சின்னச்சாமி மைதானத்திற்கு வந்த ரசிகர்கள் 6 மணி முதலே மழை நிற்கும் என்று காத்திருந்தனர். ஆனால் 10 மணியை கடந்த போதும் மழை ஓய்ந்தபாடு இல்லை.
இதனால் ஆர்சிபி – கேகேஆர் அணிகளுக்கு இடையிலான போட்டி ரத்தாகும் நிலை உருவாகி இருக்கிறது. ஒருவேளை போட்டி ரத்து செய்யப்பட்டால், இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் அளிக்கப்படும். அப்படி வழங்கப்பட்டால், ஆர்சிபி அணி 17 புள்ளிகளுடன், பிளே ஆஃப் சுற்றில் ஒரு காலினை எடுத்து வைக்கும். நாளை நடக்கும் 2 போட்டிகளில் பஞ்சாப் அல்லது டெல்லி அணிகள் தோல்வியடைந்தால், ஆர்சிபி தகுதிபெறும்.
ஆர்சிபி பிளே ஆஃப் வாய்ப்பு
அதெபோல் கேகேஆர் அணி 12 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழக்கும். ஏனென்றால் கேகேஆர் அணி 12 போட்டிகளில் விளையாடி 11 புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் கேகேஆர் – ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரத்து செய்யப்பட்டாலும், ஆர்சிபி அணிக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
இதனால் ஆர்சிபி அணியின் பிளே ஆஃப் வாய்ப்பும் கிட்டத்தட்ட உறுதியாகும் என்பதால், விராட் கோலியின் ரசிகர்கள் உற்சாகமாகவே இருக்கின்றனர். இருந்தாலும், பெங்களூர் மண்ணில் விராட் கோலியின் ஆட்டத்தை பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் ஆவலாக இருப்பதால், 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு 10.56 மணி வரை நடுவர்கள் காத்திருப்பார்கள். இல்லையென்றால், ஆட்டம் ரத்தானதாக அறிவிக்கப்படும்.

