2025 ஆம் ஆண்டின் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் துபாயில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்தத் தொடருக்கு ஆயத்தமாகும் வகையில் கிரிக்கெட் உலகின் முன்னணி அணிகள் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இந்தத் தொடரின் முதல் 2 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் சிறப்பாக விளையாடி 87 ரன்கள் எடுத்தார். மேலும் ஆல்ரவுண்டர் அக்ஷர் பட்டேல் 52 ரன்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 58 ரன்களும் எடுத்து இந்தியா வெற்றி பெற உதவினர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 304 ரன்கள் என்ற இலக்கை துரத்தி ஆடியது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 119 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தார். இந்தப் போட்டியிலும் அக்சர் பட்டேல் சிறப்பாக விளையாடி 41 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி மிடில் ஆர்டரில் இடதுகை வீரரான அக்ஷர் பட்டேலை களமிறக்கி இங்கிலாந்து அணியின் சுழற் பந்துவீச்சாளர்களை தாக்கி அதிரடியாக விளையாடியது கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமர்சிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான டோடா கணேஷ், இந்திய அணி நிர்வாகத்தின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் அவர் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் அணுகுமுறை முட்டாள்தனமான ஒன்று என மிகவும் மோசமாக விமர்சனம் செய்திருக்கிறார். தொடர்ந்து இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ராகுலை ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்ய வைப்பது மிகவும் அநீதியான ஒன்று எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விரிவாக பதிவு செய்திருக்கும் அவர், பவுலிங் ஆல் ரவுண்டரான அக்ஷர் பட்டேலை தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் களமிறக்குவது எந்த விதத்திலும் நியாயமாகாது. ராகுலுக்கு முன்பாக அக்சர் பட்டேலை பேட்டிங் செய்ய அனுப்பியது கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கம்பீரின் தவறான அணுகுமுறை. கேஎல் ராகுல் போன்ற ஒரு சிறந்த பேட்ஸ்மேனுக்கு முன்பாக பவுலிங் ஆல் ரவுண்டரான அக்ஷர் பட்டேலை களமிறக்குவது எப்படி சரியான அணுகுமுறையாக இருக்கும்.? என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
மேலும் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் இந்திய அணி 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்திருக்கும் போது ராகுலுக்கு முன்பாக அக்சர் பட்டேலை களமிறக்க இவர்களுக்கு தைரியம் இருக்கிறதா.? எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார். இந்திய அணிக்காக கடந்த பல வருடங்களாக ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் ராகுலை ஆறாவது இடத்தில் களமிறக்கியது மூளை இல்லாத செயல் எனவும் அவர் கடுமையான சொற்களை பதிவு செய்திருக்கிறார்.
கேஎல் ராகுல் ஒரு நாள் போட்டிகளில் கடந்த சில வருடங்களாக இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். மேலும் 2023 ஆம் வருட ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணிக்கு ஐந்தாவது இடத்தில் களமிறங்கி சிறப்பான பங்களிப்பை வழங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது நடைபெற்று வரும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரில் முதல் போட்டியில் 2 ரன்களில் அவுட்டான அவர் இரண்டாவது ஒருநாள் போட்டியில் 10 ரன்னில் ஆட்டமிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

