2026 டி20 உலகக் கோப்பை தொடரில் நாளை இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி இலங்கை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கி நடைபெற இருக்கிறது. பல சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த போட்டி நடைபெறுகின்ற காரணத்தினால் இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களிடையேயும் வழக்கத்தை விட எதிர்பார்ப்பு மிக அதிகமாக காணப்படுகிறது. மேலும் இது உலக கிரிக்கெட் ரசிகர்கள் இடையேயும் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.
அதே சமயத்தில் போட்டி நடைபெறும் நாளில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வெளியாக இருக்கும் செய்தி இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களையும் கவலை அடைய வைத்திருக்கிறது. பாகிஸ்தான் அரசாங்கம் ஒரு வழியாக இந்திய அணிக்கு எதிராக விளையாட சம்மதித்திருக்கும் நிலையில், தற்போது இந்த போட்டிக்கு புதிய வில்லனாக மழை உருவெடுத்து இருப்பது ஐசிசி முதல் ஒளிபரப்பாளர்கள் வரை கவலையை உண்டாக்கியுள்ளது.
இந்த போட்டி நடைபெறும் நாளில் வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் எனவும், இதன் காரணமாக போட்டி நடைபெறும் நேரத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் 80 சதவீதம் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கிறது. போட்டி நடைபெறும் நாளில் மாலை 6:00 மணி மற்றும் 8 மணி என இரண்டு நேரங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அதே சமயத்தில் இலங்கையில் முழு மைதானத்தையும் தார்பாய்கள் கொண்டு மூடுவது வழக்கமாக உள்ள காரணத்தினால், மழையைத் தாண்டியும் போட்டியை நடத்திவிட முடியும் என்று நம்பப்படுவதாக தெரிகிறது.

