நாங்க தோக்க காரணம் அந்த 6 ஓவர் தான்.. அடுத்த மேட்ச் பக்கா பிளானோட வறோம்.. இதத்தான் பண்ண போறோம் – வங்கதேச கேப்டன் பேட்டி

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருக்கிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் பங்களாதேஷ் அணி 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது . இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்கியது.

- Advertisement -

குவாலியர் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து ஆடிய இந்தியா 11.5 ஓவர்களில் 128 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகள் கைப்பற்றிய அர்ஸ்தீப் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

- Advertisement -

இந்தப் போட்டிக்கு பின் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பேசிய பங்களாதேஷ் அணியின் கேப்டன் சாந்தோ தங்கள் அணி திட்டங்களுக்கு ஏற்றவாறு சரியாக செயல்படாததால் தோல்வி அடைந்ததாக தெரிவித்திருக்கிறார். மேலும் அடுத்த போட்டியில் சிறப்பான திட்டங்களுடன் வந்து இந்திய அணியை வீழ்த்துவோம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தங்களது அணியின் பேட்ஸ்மேன்கள் விரைவாக ஆட்டம் இழந்தது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இது தொடர்பாக பேசியிருக்கும் நஜ்முல் ஹுசைன் சாந்தோ “இந்தப் போட்டியில் நாங்கள் சிறப்பாக தொடங்கவில்லை. டி20 கிரிக்கெட் பொருத்தவரை முதல் 6 ஓவர்கள் முக்கியமானது. பவர் பிளே ஓவர்களில் நாங்கள் ரன்களை குவிக்க தவறி விட்டோம். மேலும் எங்களது திட்டமிடல் சரியாக இல்லை” என தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” டி20 கிரிக்கெட்டில் பாஸிட்டிவ் மனநிலையுடன் ஆடுவது முக்கியம். அதேநேரம் எந்த பந்துவீச்சாளருக்கு எதிராக நிதானமான ஆட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் தெரிந்திருக்க வேண்டும்” எனக் கூறினார்.

இது குறித்து தொடர்ந்து பேசிய அவர் ” டி20 கிரிக்கெட் என்பது அதிரடியாக ஆடி ரன்கள் குவிப்பது மட்டுமல்ல. ஒன்று, இரண்டு ரன்கள் சேர்ப்பதும் முக்கியமானது. அதனை இந்தப் போட்டியில் நாங்கள் செயல்படுத்த தவறி விட்டோம். இந்தப் போட்டியில் எங்களிடம் சரியான திட்டமிடல் இல்லை. அடுத்த போட்டியில் சிறந்த திட்டத்துடன் களம் இறங்குவோம்” எனக் கூறினார். “ஆட்டத்தின் துவக்கத்திலேயே விக்கெட் கொடுக்காமல் ஆடும் போது இறுதிக்கட்டத்தில் வேகமாக ரன்கள் குவிக்க முடியும்” எனவும் தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் தங்கள் அணியில் வேக பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹீம் மற்றும் சுழற் பந்துவீச்சாளர் ரிசாத் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினார்கள் என பாராட்டு தெரிவித்தார். மேலும் அடுத்த போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை சமன் செய்வோம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பாக t20 போட்டி தொடர்களில் இந்திய அணியை வீழ்த்துவோம் என பங்களாதேஷ் அணியின் கேப்டன் சாந்தோ கூறி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி வருகின்ற 9ம் தேதி டெல்லியில் வைத்து நடைபெற இருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles