கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. இந்த ஆட்டத்தில் முதல் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய கேகேஆர் அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்களை எடுத்து அபார வெற்றியை பெற்றது.
நம்பர் 3ல் ஆடுவது ஏன்?
இந்த தோல்விக்கு பின் ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பேசும் போது, இந்த மைதானத்தில் 170 ரன்கள் என்ற இலக்கு சிறந்த ஒன்றாகும். அதற்காகதான் நாங்கள் முயற்சித்தோம். ஆனால் இந்த பிட்ச் பற்றி நன்றாக அறிந்திருந்தும், நான் கொஞ்சம் அவசப்பட்டுவிட்டேன். அதனால் 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம்.
அதேபோல் டி காக் விக்கெட்டை விரைவாக வீழ்த்த முயற்சித்தோம். ஆனால் அது நடக்கவில்லை. அதனால் மிடில் ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்த முயற்சித்தோம். ஆனால் சிறப்பாக விளையாடி அசத்திவிட்டார். நம்பர் 3ல் விளையாடுவதை பற்றி சொல்ல வேண்டுமென்றால், அணியின் தேவைக்கு ஏற்ப விளையாடுவது தான் ஒரு பேட்ஸ்மேனின் கடமை.
தவறுகளை திருத்துவோம்
கடந்த சீசனில் அணி நிர்வாகம் என்னை நம்பர் 4ல் விளையாட வைத்தது. இம்முறை நம்பர் 3ல் விளையாட தேவைப்படுகிறேன். அதனால் எந்த பிரச்சனையும் இல்லை. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டில் எங்கள் அணியில் அதிகளவிலான இளைஞர்கள் இருக்கிறோம். போட்டியின் சில இடங்களில் நாங்கள் நன்றாக செயல்பட்டோம்.
ஆனால் முழுமையாக சிறப்பாக செயல்பட முடியவில்லை. அப்படி மொத்தமாக பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்படும் போது, ஆட்டத்தின் முடிவு எங்களுக்கு சாதகமாக அமையும். இந்த ஆட்டத்தில் இருந்து ஏராளமான கற்றல் கிடைத்துள்ளது. தவறுகளை மீண்டும் செய்யாமல், சென்னை அணிக்கு எதிரான போட்டியில் நல்ல மனநிலையுடன் களமிறங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

