டெஸ்ட் மாதிரி நெனச்சி வராதீங்க.. டி20ல் எங்க ஆட்டம் இப்படித்தான் இருக்கும்.. இந்தியாவை ஜெயிக்க போறோம் – பங்களாதேஷ் கேப்டன் அதிரடி பேட்டி

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் நாளை முதல் ஆரம்பமாக இருக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி குவாலியர் நகரில் வைத்து நடைபெற உள்ளது. இந்தப் போட்டி தொடரில் இந்திய அணியை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றுவோம் என பங்களாதேஷ் அணியின் கேப்டன் நஜ்முல் ஹுசைன் சாந்தோ தெரிவித்திருக்கிறார். முன்னதாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பங்களாதேஷ் அணி 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

- Advertisement -

இதில் சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூர் நகரில் வைத்து நடைபெற்றது. இந்தப் போட்டியில் 2 நாட்களின் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட போதும் மீதி இருந்த 2 நாட்களில் டி20 போல அதிரடியாக விளையாடிய இந்தியா 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷில் வீழ்த்தி இரண்டாவது டெஸ்ட் போட்டியை வென்றதோடு தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

- Advertisement -

பாகிஸ்தான் நாட்டிற்கு சென்ற பங்களாதேஷ் அணி அந்த தொடரில் பாகிஸ்தான் அணியை ஒயிட் வாஸ் செய்திருந்தது. இதனால் இந்திய அணிக்கு எதிரான தொடரில் பங்களாதேஷ் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்திய அணி, பங்களாதேஷ் அணியை அதிரடியாக வென்று உலக கிரிக்கெட்டில் நாங்கள் தான் சாம்பியன் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தது. இந்நிலையில் இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரை நிச்சயமாக வெல்வோம் என பங்களாதேஷ் அணியின் கேப்டன் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

நாளை முதலாவது டி20 போட்டி தொடங்க இருக்கும் நிலையில் பேட்டி அளித்திருக்கும் அவர் டி20 போட்டிகளில் எங்களது அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும் என கூறி இருக்கிறார். இது தொடர்பாக பேசிய பங்களாதேஷ் அணியின் கேப்டன் சாந்தோ ” இந்திய அணிக்கு எதிரான தொடரை வெற்றி பெறுவதை எங்கள் இலக்காக நிர்ணயித்திருக்கிறோம். ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் அதிரடி பாணியில் விளையாடினோம். நாங்கள் அரை இறுதிக்கு தகுதி பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகள் இருந்தும் தோல்வி அடைந்தோம். தற்போது எங்களிடம் துடிப்பான இளம் அணி இருக்கிறது” என தெரிவித்திருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரில் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் டி20 கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. டி20 ஆட்டத்தில் போட்டி நடைபெறும் நாளில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்கள் வெற்றி பெறுவார்கள். கடந்த காலத்தில் நடைபெற்ற ஆட்டங்கள் டி20 போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்தாது” என தெரிவித்தார்.

- Advertisement -

ஆடுகளம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி தெரியவில்லை. இந்த ஆடுகளத்தில் 2 நாட்கள் பயிற்சி செய்திருக்கிறோம். ஆடுகளம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிய முயற்சி செய்கிறோம். ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் அது முக்கியமான ஒன்று எனக் கூறிய சாந்தோ டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஆட்டம் நடைபெறும் நாளில் பேட்டிங், பௌலிங் மற்றும் ஃபீல்டிங் என 3 துறைகளிலும் எந்த அணி சிறப்பாக செயல்படுகிறதோ அந்த அணி தான் வெற்றி பெறும் என தெரிவித்தார்.

டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை நீங்கள் எவ்வளவு அனுபவ வீரராக இருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. போட்டி நடைபெறக்கூடிய அந்த நாளில் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அந்த அணி வெற்றி பெறுவார்கள். போட்டி நடைபெறும் நாளில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவை வீழ்த்துவோம். எங்களிடம் அனுபவம் வாய்ந்த மற்றும் இளம் வீரர்களைக் கொண்ட அணி இருக்கிறது . அதனால் இந்தப் போட்டி தொடரை நிச்சயமாக வெல்வோம் என தெரிவித்திருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles