தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றன. 16 புள்ளிகளுடன் இந்திய அணி முதல் இடத்திலும் 12 புள்ளிகள் உடன் தென்னாப்பிரிக்கா இரண்டாவது இடத்திலும் இருக்கிறது. மேலும் இந்த இரண்டு அணிகளும் உலகக்கோப்பை அரை இறுதி போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளது.
இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா அரை இறுதிக்கு தகுதி பெற்று விடும். ஆப்கானிஸ்தான் அணிக்கும் அரையிறுதிக்கான வாய்ப்புகள் இருப்பதால் அந்த அணியும் வெற்றி பெற கடுமையாக போராடும். இதனால் இந்த போட்டி பரபரப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மனான ஸ்டீவன் ஸ்மித் இந்த உலகக் கோப்பையில் வீழ்த்துவதற்கு கடுமையான அணி பற்றி தனது பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். இன்றைய போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் தலை சுற்றல் காரணமாக அணியில் இடம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மும்பையில் நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக இரண்டு முறை தலைசுற்றல் ஏற்பட்டதால் அவருக்கு இந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் அரை இறுதி வாய்ப்பு மற்றும் இந்த வருட உலக கோப்பையில் பலம் வாய்ந்த அணிகள் குறித்து பேசி இருக்கிறார் ஸ்டீவன் ஸ்மித். இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் ” உலகக் கோப்பை போன்ற நீண்ட போட்டி தொடர்களில் அதன் இறுதிக் கட்டங்களுக்கு வரும்போது நல்ல ஃபார்மில் இருப்பது அவசியம். நாங்கள் சரியான நேரத்தில் நல்ல ஃபார்மிற்கு வந்து கொண்டிருக்கிறோம். அரை இறுதிப் போட்டிக்கு நுழைவது முக்கியமான விஷயம்” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” இந்த உலகக் கோப்பையின் தொடக்கத்தில் நாங்கள் கடினமான போட்டியை சந்தித்தோம். இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா நிகரிடம் தோல்வி அடைந்தாலும் அதன் பிறகு சரியாக பயணித்து ஐந்து வெற்றிகளை தொடர்ச்சியாக பெற்றிருக்கிறோம். முக்கியமான தருணங்களில் நல்ல ஃபார்மிற்கு வந்திருக்கிறோம். ஆப்கானிஸ்தான் அணியுடன் போட்டியில் வெற்றி பெற்றால் நாங்கள் அரை இறுதிக்கு தகுதி பெற்று விடுவோம் என்று நினைக்கிறேன். எனினும் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மிகச் சிறந்த கிரிக்கெட் விளையாடி வருகிறது” என்று தெரிவித்தார்.
இந்திய அணி தொடர்பாக விரிவாக பேசிய அவர் ” இந்த உலகக் கோப்பையில் இந்தியா தான் வீழ்த்துவதற்கு கடினமான அணியாக இருந்து வருகிறது. அவர்கள் மிகச் சிறப்பான கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள். எங்களுக்கு அவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக அவர்களை வீழ்த்த முயற்சி செய்வோம். மேலும் அவர்கள் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்திய விதம் இந்தியா எவ்வளவு பலமாக இருக்கிறது என்பதை காட்டுகிறது. அவர்களை அரையிறுதி போட்டியில் எதிர்கொள்வது என்பது ஒரு சவாலான காரியமாக இருக்கும்” என தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான் அணி குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஸ்டீவன் ஸ்மித் ” இந்த உலகக்கோப்பை தொடரில் முக்கிய அணிகளுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர். அவர்களிடம் உலகத் தரம் வாய்ந்த ஸ்பின்னர்களும் இருக்கிறார்கள். மேலும் அவர்களது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். நிச்சயம் ஆப்கானிஸ்தான் ஒரு அபாயகரமான அணி என கூறி முடித்தார் ஸ்மித்.

