இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இலங்கை அணியுடன் நடந்து முடிந்த ஒரு நாள் போட்டி தொடருக்குப் பிறகு லண்டனில் தனது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பேசிய விராட் கோலி, மகேந்திர சிங் தோனி மற்றும் தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டிவில்லியர்ஸ் ஆகிய இருவரில் தனக்கு பிடித்த வீரர் யார்.? என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார்.
விராட் கோலி சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகி நேற்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைந்தது. கடந்த 2008 ஆம் வருடம் மலேசியாவில் நடைபெற்ற அண்டர் 19 உலக கோப்பையை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து 2008 ஆம் வருடம் இலங்கை சுற்றுப்பயணம் செய்த இந்திய அணியில் விராட் கோலி இடம் பிடித்தார். ஆகஸ்ட் 18ஆம் தேதி 2008 ஆம் வருடம் இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்வை தொடங்கினார் கோலி.
மேலும் இந்தத் தொடரில் தனது முதல் அரை சதத்தையும் பதிவு செய்தார். அதன் பிறகு சில காலம் இந்திய அணியிலிருந்து ஓரம் கட்டப்பட்ட விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 2009 ஆம் வருடம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூலம் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பினார். அந்தத் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது முதல் மேன் ஆஃப் தி மேட்ச் விருதை வென்ற விராட் கோலி தொடர்ந்து இந்திய அணியில் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
ஆரம்பத்தில் விராட் கோலியின் கிரிக்கெட் கேரியரில் சிறிது தடுமாற்றங்கள் இருந்தாலும் அதன் பிறகு தனது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியின் ரன் மெஷினாக மாறினார் விராட் கோலி. மேலும் ஒரு நாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து 50 சதங்களை பதிவு செய்தார். 2011 ஆம் வருட உலகக்கோப்பை மற்றும் 2013 ஆம் வருட சாம்பியன்ஸ் டிராபி கோப்பைகளை மகேந்திர சிங் தோனி தலைமையிலான அணியுடன் வென்ற விராட் கோலி 2024 ஆம் வருடம் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டிகளை ரோகித் சர்மா தலைமையில் வென்ற அணியிலும் முக்கிய பங்காற்றினார்.
டி20 உலக கோப்பை வெற்றியை தொடர்ந்து சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகம் ஆகி 16 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நேற்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் விராட் கோலி. இந்த நிகழ்ச்சியில் ரேப்பிட் ஃபயர் ரவுண்டில் விராட் கோலிக்கு பிடித்தமான வீரர் தோனியா அல்லது டிவிலியர்சா.? என்ற கேள்வி கேட்கப்பட்டது.
இந்தக் கேள்விக்கு விராட் கோலியின் பதிலை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். எனினும் விராட் கோலி தோனி மற்றும் டிவிலியர்ஸ் இருவருமே தனக்கு பிடித்தமான வீரர்கள் என புன்னகையுடன் பதிலளித்தார். விராட் கோலி மற்றும் தோனி இருவருக்கும் இடையேயான நட்பு விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான நாள் முதல் தொடர்ந்து வருகிறது. விராட் கோலி தனது கிரிக்கெட் கேரியர் ஆரம்பத்தில் தடுமாறிய போது எம்.எஸ் தோனி அவருக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். மேலும் மைதானத்திலும் விராட் கோலி மற்றும் தோனி இருவரும் இந்திய அணிக்காக பல வெற்றிகரமான பார்ட்னர்ஷிப்புகளை அமைத்துள்ளனர்.
மேலும் விராட் கோலிக்கு மைதானத்திலும் மைதானத்திற்கு வெளியேயும் பல நேரங்களில் தோனி ஆதரவாக இருந்ததாக கோலி பல பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார். மறுபுறம் விராட் கோலி மற்றும் ஏ.பி டிவில்லியர்ஸ் இருவரும் ஆர்சிபி அணிக்காக நீண்ட காலம் இணைந்து விளையாடி இருக்கின்றனர். அவர்கள் இருவர் இடையே மிகச் சிறந்த நட்பு இருந்து வருகிறது. இதன் காரணமாக விராட் கோலி, தோனி மற்றும் டிவில்லியர்ஸ் இருவருமே தனக்கு பிடித்த வீரர்கள் என பதில் அளித்திருக்கிறார்.

