இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20I இரண்டாம் நாள் போட்டியானது க்கெபர்ஹாவில் நவம்பர் 10 ஆம் தேதி அன்று நடைபெற்றது. இந்நிலையில், இரண்டாவது டி20I போட்டியில் இந்திய அணியானது தோல்வியை தழுவியது.
இந்திய அணியில், தமிழகத்தை சார்ந்த வருண் சக்கரவர்த்தி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 முக்கிய விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியிருந்தார். இதில், ஹென்ரிச் கிளாசன் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோரின் முக்கியமான விக்கெட்களும் அடங்கும்.
இதையடுத்து வருண் சக்ரவர்த்தி, கம்பீர் தன்னை ஊக்கப்படுத்தியதாக பேட்டி அளித்தார்.
கம்பீரின் அறிவுரை:
வருண் சக்கரவர்த்தி ஒளிபரப்பு ஒன்றில் கூறியதாவது, “ஆம், நாங்கள் வங்காளதேச அணிக்கு எதிராக சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடினோம். கம்பீர் தான் இந்திய அணிக்கும் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். கம்பீரும் நானும் நிறைய பேசிக் கொண்டோம்.
அப்பொழுது அவர், இந்திய அணியில் எனக்கான வேலை என்ன? எனக்கான பங்களிப்பு என்ன? போன்றவற்றிற்கு தெளிவான விளக்கத்தை எனக்கு தந்தார்.
கம்பீர் என்னிடம், நீங்கள் 30-40 ரன்களை கூட கொடுங்கள் பரவாயில்லை. ஆனால், நீங்கள் விக்கெட்டுகளை எடுப்பதையே கூர்ந்து கவனிக்க வேண்டும். அதுவே உங்கள் அணியில் உங்களின் பங்கு. ஆம், அவர் கொடுத்த அறிவுரையானது, இன்று எனக்கு நிச்சயமாகவே பயன்பட்டது”.
உள்ளூர் லீக் தொடரில் விளையாடினேன்:
மேலும் அவர் கூறுகையில், “எனது கடந்த மூன்று வருட கிரிக்கெட் பயணம் சற்று கடினமாகவே இருந்தது. நான் ஒன்றை மட்டும் செய்தேன், அதிகமாக கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன். அதுவும், உள்ளூர் லீக் போட்டிகளில் விளையாடத் தொடங்கினேன். இந்த முயற்சிதான் எனது கிரிக்கெட் விளையாட்டை நன்றாக புரிந்துகொள்ள உதவியது” என்று கூறி முடித்தார்.
2024 ஐபிஎல்-ல் வருண் சக்ரவர்த்தியின் சிறப்பான விளையாட்டு காரணமாக சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் மீண்டும் அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

