ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் சுப்மன் கில் மற்றும் பட்லர் ஆகியோரின் அபார அரைசதம் காரணமாக 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்களை குவித்தது. இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணி தரப்பில் ஜெய்ஸ்வால் – வைபவ் சூர்யவன்சி இணை களமிறங்கியது.
இஷாந்த் சர்மா பரிதாபம்
முகமது சிராஜ் வீசிய முதல் ஓவரிலேயே சிக்ஸ் அடித்து தொடங்கிய வைபவ் சூர்யவன்சி, இதன்பின் இஷாந்த் சர்மாவை எதிர்கொண்டார். அதாவது சர்வதேச கிரிக்கெட்டில் 8 ஆண்டுகள் அனுபவத்தை இஷாந்த் சர்மா பெற்றிருந்த போது, வைபவ் சூர்யவன்சி பிறந்தவர். இதனால் இஷாந்த் சர்மாவை எப்படி சூர்யவன்சி எப்படி சமாளிப்பார் என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் இஷாந்த் சர்மா வீசிய முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்த அவர், 2வது பந்தையும் சிக்ஸ் அடித்து அதிர்ச்சி கொடுத்தார். இதன்பின் 3வது பந்தில் பவுண்டரி அடிக்கப்பட்ட நிலையில், 5வது பந்தில் மீண்டும் சிக்ஸ் சென்றது. அதேபோல் கடைசி பந்தில் பவுண்டரி அடிக்கப்பட, அந்த ஓவரில் மட்டும் 28 ரன்கள் குவிக்கப்பட்டது.
சாதனை
தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் பவுலிங்கில் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசிய வைபவ் சூர்யவன்சி, 17வது பந்துகளில் தனது முதல் ஐபிஎல் அரைசதத்தை விளாசி புதிய வரலாறு படைத்துள்ளார். இந்த சீசனில் குறைந்த பந்துகளில் அரைசதம் விளாசிய வீரராகும் வைபவ் சூர்யவன்சி சாதனை படைத்துள்ளார்.
அதேபோல் ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான் அணிக்காக குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளார். வைபவ் சூர்யவன்சியின் ஆட்டத்தை பார்த்த ராகுல் திவாட்டியா உடனடியாக சென்று கை கொடுத்து பாராட்டினார். இதன்பின் டைம் அவுட்டின் போது ராகுல் டிராவிட் வந்து வைபவ் சூர்யவன்சி தோளில் தட்டி பாராட்டி சென்றார்.

