நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் நேற்று இந்திய அணி தனது முதல் போட்டியில் அமெரிக்க அணிக்கு எதிராக 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும் இந்திய அணி முதல் ஆறு விக்கெட்டுகளை 77 ரன்னுக்கு இழந்து பெரிய அளவில் தடுமாறியது. இந்த நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி 160 ரன்கள் எடுத்திருந்தாலும் கூட தங்களால் வெற்றி பெற்றிருக்க முடியும் என அமெரிக்க கேப்டன் மோனன்க் படேல் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசும் பொழுது “உண்மையில் எங்களுடைய பவுலர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள். அவர்கள் ஆடுகளத்தை பற்றி மிக நன்றாக மிக வேகமாக தெரிந்து கொண்டார்கள். நாங்கள் மிக வேகமாக இந்திய விக்கெட்டுகளை கைப்பற்றி அவர்களை அழுத்தத்தில் வைத்திருந்தோம். அவர்களால் எங்களுக்கு எதிராக பவர் பிளேவில் ரன்கள் எடுக்க முடியவில்லை. எங்களுக்கு போட்டியின் ஆரம்பத்திலேயே நல்ல மொமெண்டம் கிடைத்தது. நாங்கள் அவர்களைத் தொடர்ந்து எங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டே இருந்தோம். நீண்ட நேரம் எங்கள் கட்டுப்பாட்டிலேயே இருந்தார்கள்”
“இந்திய அணிக்கு எதிராக 160 ரன்கள் என்பது அவர்கள் விளையாடாமல் எங்களுக்கு கொடுத்திருந்தால் கூட அது சரியானதுதான். ஆனாலும் நான் இந்திய அடியை 130 ரன்னில் கட்டுப்படுத்தி விடலாம் என்று நினைத்தேன். இருந்த போதிலும் இந்திய அணியை நாங்கள் நேற்று வென்று இருக்க வேண்டும். இந்த ஸ்கோர் அடிக்கக் கூடியதுதான். ஆனால் பவர் பிளேவில் முதல் மூன்று விக்கெட்டை இழந்ததால் அடுத்து வந்தவர்களால் வேகமாக விளையாட முடியவில்லை. இருந்தாலும் எங்களுக்கு இந்த போட்டியில் இருந்து நல்ல அனுபவம் கிடைத்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

