ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 9 தோல்வி, 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. இதனால் சிஎஸ்கே அணி ரசிகர்கள் தொடர் சோகத்தில் இருந்து வருகின்றனர். இருந்தாலும் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி, அடுத்த சீசனுக்குள் அணியை மீட்டெடுக்க இளம் வீரர்களை தேர்வு செய்து வருகிறார்.
ஏற்கனவே சிஎஸ்கே அணிக்குள் வந்த 17 வயதாகும் ஆயுஷ் மாத்ரே மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 48 பந்துகளில் 94 ரன்களை விளாசியதன் மூலமாக சிஎஸ்கே ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இன்னொரு பக்கம் டிவால்ட் பிரெவிஸ் புதிய எனர்ஜியை கொண்டு வந்துள்ளார்.
வன்ஷ் பேடி காயம்
மிடில் ஓவர்களில் ராயுடுவின் இடத்தை பிரெவிஸ் மூலமாக சிஎஸ்கே அணியால் எளிதாக நிரப்ப முடியும் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஃபினிஷிங் ரோலில் விளையாடுவதற்காக சிஎஸ்கே அணி நிர்வாகம் வன்ஷ் பேடியை தயார் செய்து வந்தது. ஆனால் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியின் போது வன்ஷ் பேடி காயம் காரணமாக களமிறங்கவில்லை.
இந்த நிலையில் வன்ஷ் பேடிக்கு பதிலாக 26 வயதாகும் இளம் வீரரான உர்வில் படேலை சிஎஸ்கே அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஆயுஷ் மாத்ரே ஒப்பந்தம் செய்யப்பட்ட போதே சிஎஸ்கே அணியுடன் தான் உர்வில் படேல் பயிற்சி மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் வன்ஷ் பேடி காயம் காரணமாக விலகியதால், உர்வில் படேல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த உர்வில் படேல்?
2023ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் குஜராத் அணியால் வாங்கப்பட்டவர் உர்வில் படேல். ஆனால் குஜராத் அணிக்காக விளையாட உர்வில் படேலுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நடந்த சையத் முஷ்டக் அலி தொடரில் அசத்தலாக விளையாடினார் உர்வில் படேல். 28 பந்துகளில் சதம் விளாசியதன் மூலமாக இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார் உர்வில் படேல்.
இதுவரை 47 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள உர்வில் படேல் 170 ஸ்ட்ரைக் ரேட்டில் 1,162 ரன்களை விளாசி இருக்கிறார். மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடக் கூடிய வீரரான உர்வில் படேல், சிஎஸ்கே அணிக்கு மிக முக்கியமான வீரராக உருவெடுப்பார் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் சிஎஸ்கே அணி நிர்வாகம் இம்முறை இளம் வீரர்களை அதிகளவில் நம்ப தொடங்கி இருக்கிறது.

