இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரில் முதல் அணியாக இந்தியா அர இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. நேற்றைய போட்டியில் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 14 புள்ளிகள் உடன் முதல் இடத்திலும் உள்ளது.
நேற்றைய போட்டியில் இந்திய அணிக்காக விராட் கோலி ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கில் ஆகியோர் சிறப்பாக விளையாடி அரை சதம் எடுத்தனர். தற்போது 48 ஒரு நாள் போட்டி சதங்களுடன் சர்வதேச ஒரு நாள் போட்டியில் அதிக சதம் எடுத்த வீரர்கள் போட்டியில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார் விராட் கோலி. நேற்றைய போட்டியில் அவர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 88 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
நியூசிலாந்து அணியுடன் தரம்சாலாவில் நடைபெற்ற போட்டியிலும் 95 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். தற்போது இரண்டாவது முறையாக சதத்தை நெருங்கி சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்யும் வாய்ப்பை தவறவிட்டிருக்கிறார் விராட் கோலி. விராட் கோலியின் 49 ஆவது சதம் இந்தியாவிற்கு ஆபத்தாக அமையலாம் என எச்சரித்திருக்கிறார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் கிரிக்கெட் வர்ணனையாளருமான நாசிர் ஹுசைன் .
இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் ” நான் சொல்றது ஒரே ஒரு விஷயம் தான். உலக கோப்பையை ஜெயிக்கிறது தான் எல்லாத்தையும் விட முக்கியம். அவர் 49-வது சதம் எடுப்பார். 50-வது சதமும் எடுப்பார். ஏன் 100 சதம் கூட எடுப்பார். ஆனா முக்கியமான விஷயம் என்னன்னா வேர்ல்ட் கப் ஜெயிக்கிறது. இந்தியா விராட் கோலி உடைய 49 வது சதத்தை மட்டுமே யோசிச்சிட்டு இருக்கக் கூடாது” என எச்சரித்திருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” நான் சச்சின் டெண்டுல்கர் ஒரு முறை கூறியதை கேள்விப்பட்டிருக்கிறேன். சர்வதேச கிரிக்கெட்டில் 99-வது சதத்தில் இருந்து 100-வது சதம் அடிக்கும் போது தான் மிகுந்த அழுத்தத்தை உணர்ந்ததாக அவர் குறிப்பிட்டு இருந்தார். ஹோட்டலில் வேலை செய்பவர்கள் வரை எப்போது 100-வது சதம் அடிப்பீர்கள் என கேள்வி கேட்டு தன்னை அழுத்தத்திற்கு உள்ளாக்கியதாக அவர் தெரிவித்திருந்தார்.
அதன் பிறகு அவர் தன்னை அந்த சத்தங்களில் இருந்து மறைத்துக் கொண்டார். இதற்கு காரணம் 99 ஆவது சதத்தில் இருந்து இன்னும் ஒரு 100 அடிப்பதற்கு ஏற்பட்ட அழுத்தம் தான் காரணம். விராட் கோலி இதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் வெளிப்புற அழுத்தங்களில் இருந்து தன்னை காத்து கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்திருக்கிறார் நாசிர் ஹுசைன்.
இந்தியா வருகின்ற ஐந்தாம் தேதி நடைபெற இருக்கும் போட்டியில் சவுத் ஆப்பிரிக்கா அணியை எதிர்த்து கொல்கத்தாவில் வைத்து விளையாட இருக்கிறது. அதனைத் தொடர்ந்து பன்னிரண்டாம் தேதி நெதர்லாந்து அணிக்கு எதிராக பெங்களூரில் விளையாட உள்ளது. இந்த இரண்டு போட்டிகளில் ஏதேனும் ஒரு போட்டியில் ஆவது விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்வார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே இருக்கிறது..

