இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள 5 போட்டிகளை கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடர் நவம்பர் 22-ல் ஆப்டஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது. இதற்காக இரு அணிகளின் வீரர்களும் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகின்றனர்.
இந்திய-ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டிருந்தாலும், அவரது இரண்டாவது குழந்தை பிறப்பு காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் பங்கேற்கவில்லை. எனவே, முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்துவார்.
“குழந்தை பிறப்பின் காரணமாக டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் முடிவை நூறு சதவீதம் நான் ஆதரிக்கிறேன்” என ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர் டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார்.
டிராவிஸ் ஹெட்:
ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர் டிராவிஸ் ஹெட் ரெவ்ஸ்போர்ட்ஸ் ஒன்றில் கூறியதாவது, “அவரது முடிவை நான் 100 சதவீதம் ஆதரிக்கிறேன். அவரது நிலைமையில் நான் இருந்தால், நானும் அதே முடிவை தான் எடுப்பேன்.
கிரிக்கெட் வீரர்களாக நாம் பல விஷயங்களை தியாகம் செய்கிறோம், வசதியான வாழ்க்கையை வாழ்கிறோம், நல்ல பாராட்டுகளை பெறுகிறோம், ஆனால் மறுபுறம் சில முக்கிய தருணங்களை நாங்கள் இழக்கிறோம். ரோகித்தின் நிலைமையில் நான் இருந்தாலும் இதையேதான் செய்திருப்பேன். எனவே, ரோகித்தின் இந்த முடிவை நான் முற்றிலும் ஆதரிக்கிறேன்” என்று கூறினார்.
எதிர்காலத்தை குறித்து அப்புறம் பார்க்கலாம்:
மேலும் அவர், “நான் கிரிக்கெட் விளையாடுவதற்கு என் குடும்பமும் என் சக வீரர்களுமே எனக்கு மிகப்பெரிய உந்துதலை அளிக்கிறார்கள். எனவே, குடும்பத்தை குறித்த எதிர்கால முடிவுகளை பிறகு எடுப்பேன் இப்பொழுது அல்ல” என்று கூறி முடித்தார்.
சுவாரசியமாக, ரோகித்தின் இதே நிலைமைதான் டிராவிஸ் ஹெட்க்கும் நிலவி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான வெள்ள பந்துத் தொடரில் இருந்து ஹெட் விலகி இருக்கிறார். அவரது மனைவி ஜெஸ்ஸுக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவுள்ளதால், அவரும் தன் மனைவியுடன் நேரத்தை கழிக்க விரும்பி இருக்கிறார்.

