மனுஷனே இல்ல.. 20 ஃபோர்ஸ்.. 5 சிக்ஸ்.. மீண்டும் டிராவிஸ் ஹெட் ருத்ரதாண்டவம்.. இங்கிலாந்து பரிதாப தோல்வி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து ஒரு நாள் போட்டி தொடர் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டிராவஸ் ஹெட் அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருக்கிறது.

- Advertisement -

இங்கிலாந்து மற்றும் நடப்பு உலக சாம்பியன் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நேற்று இங்கிலாந்து நாட்டின் ட்ரண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் மற்றும் டி20 உலக கோப்பை தொடர்களில் ஏற்பட்ட தோல்விகளை தொடர்ந்து இளம் வீரர்களைக் கொண்ட அணியை இங்கிலாந்து களமிறக்கியது. இங்கிலாந்து ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் சொந்த காரணங்களுக்காக அணியில் இருந்து விலகியதால் அந்த அணியின் ஹாரி ப்ருக்ஸ் கேப்டனாக செயல்பட்டார்.

- Advertisement -

இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் பிலிப்ஸ் சால்ட் 17 ரன்களில் ஆட்டம் இழந்த போதும் அந்த அணியின் மற்றொரு துவக்க வீரர் பென் டக்கெட் மற்றும் வில் ஜாக்ஸ் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணி விரைவாக ரன்கள் குவிக்க உதவினர். இவர்கள் இருவரும் அரை சதத்தை கடந்து அதிரடியாக விளையாடிய நிலையில் வில் ஜாக்ஸ் 56 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 62 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய துவக்க வீரர் பென் டக்கெட் சதம் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 91 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 95 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார் .

- Advertisement -

இவர்களைத் தொடர்ந்து கேப்டன் ஹாரி ப்ருக்ஸ் ஓரளவுக்கு சிறப்பாக விளையாடி 31 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்குப் பின் வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் இங்கிலாந்து அணி 49.3 ஓவர்களில் 315 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் ஆடம் ஜாம்பா மற்றும் மார்னஸ் லபுசேன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். மேலும் டிராவஸ் ஹெட் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து 316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்ய வந்தது.

ஆனால் அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க வீரராக களம் இறங்கிய கேப்டன் மார்ஸ் 10 ரன்களில் அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து ஸ்டீவன் ஸ்மித் மற்றொரு துவக்க வீரரான ட்ராவேஸ் ஹெட்டுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க தொடங்கியது. ஹெட் தனது வழக்கமான அதிரடியில் இறங்கினார். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அசுரத்தனமான தாக்குதல் நடத்தி விரைவாக தனது அரை சதத்தை நிறைவு செய்தார்.

- Advertisement -

இவருக்கு துணையாக ஆடிய ஸ்மித் 28 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 32 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து களம் இறங்கிய கிரீன் 5 பவுண்டரிகளுடன் 32 ரன்களில் ஆட்டம் இழக்க ஆஸ்திரேலியா அணிக்கு சற்று தடுமாற்றம் ஏற்பட்டது. எனினும் டிராவஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லபுசேன் ஜோடி ஆஸ்திரேலியா அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. சிறப்பாக விளையாடிய ஹெட் ஒரு நாள் போட்டிகளில் மற்றொரு சதத்தை நிறைவு செய்தார். இவருடன் விளையாடிய மார்னஸ் லபுசேன் சிறப்பான அரை சதம் அடித்தார்.

இவர்கள் இருவரும் இணைந்து நான்காவது விக்கெட்க்கு ஜோடியாக 107 பந்துகளில் 148 ரன்கள் சேர்க்க ஆஸ்திரேலியா அணி 44 ஓவர்களில் 317 ரன்கள் எடுத்து முதலாவது ஒரு நாள் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. இறுதி வரை ஆட்டம் இழக்காமல் ருத்ரதாண்டவம் ஆடிய ஹெட் 129 பந்துகளில் 20 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 154 ரன்கள் எடுத்திருந்தார்.மார்னஸ் லபுசேன் 61 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 71 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles