இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் சீசன் வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்க இருக்கும் துலீப் டிராபி போட்டிகளுடன் ஆரம்பமாகிறது. இந்த வருடத்திற்கான துலீப் டிராபி போட்டிகளில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் பலரும் களமிறங்க இருக்கின்றனர். இந்தத் தொடரில் விளையாட தமிழக வீரர் நடராஜன் தேர்வு செய்யப்படாதது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. மேலும் நடராஜன் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறித்து தனது யூடியூப் சேனலில் பதிலளித்திருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்.
தமிழகத்தைச் சேர்ந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளரான தங்கராசு நடராஜன் துல்லியமான யார்க்கர்கள் மற்றும் வேரியேஷன் பந்துகள் வீசுவதில் வித்தகர். கடந்த 2020 ஆம் வருடம் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணியில் வலை பயிற்சி பந்துவீச்சாளராக இடம் பெற்றார். எனினும் அந்தத் தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதால் டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கும் வாய்ப்பு நடராஜனுக்கு கிடைத்தது.
தனக்கு கிடைத்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்திய நடராஜன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசினார். இதன் காரணமாக ஆஸ்திரேலியா தொடருக்கான ஒரு நாள் மற்றும் டி20 அணிகளிலும் இடம் பிடித்தார். அவர் கடைசியாக இங்கிலாந்து அணிக்கு எதிராக 2021 ஆம் வருடம் மார்ச் மாதம் டி20 போட்டிகளில் பங்கேற்றார். அதன் பிறகு இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை.
கடந்த சில காலங்களாக காயங்களால் அவதிப்பட்டு வந்த நடராஜன் இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக பந்து வீசி 19 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மேலும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரிலும் 12 விக்கெட் வீழ்த்தி அவர் விளையாடிய திருப்பூர் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். ஐபிஎல் தொடரில் நடராஜன் சிறப்பாக பந்து வீசிய போதிலும் டி20 உலக கோப்பையில் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது.
மேலும் வர இருக்கின்ற துலீப் டிராபி தொடரில் கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா போன்ற முன்னணி வீரர்கள் விளையாடுவதால் தமிழக வீரர் நடராஜனும் தேர்வு செய்யப்படலாம் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருந்தனர். அதிலும் அவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. இதனால் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்து வந்தனர். இந்நிலையில் தமிழக வீரரும் இந்திய அணியின் மூத்த ஆல் ரவுண்டருமான ரவிச்சந்திரன் அஸ்வின், நடராஜன் தேர்வு செய்யப்படாதது குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
இது தொடர்பாக பேசியிருக்கும் அஸ்வின் ” நடராஜன் ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான சிறந்த பந்துவீச்சாளர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்த வருடம் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் மிகச் சிறப்பாக பந்து வீசினார். ஆனால் நடராஜன் கடந்த 2021 ஆம் வருடம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தனது கடைசி முதல் தரப் போட்டியில் விளையாடியிருக்கிறார். அதன் பிறகு அவர் தமிழக அணிக்காக கூட ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடியதில்லை.
கடந்த 2021 ஆம் வருடம் நடராஜன் தனது முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு ரஞ்சி டிராபி சீசனுக்கான தமிழக அணியில் தேர்வு செய்யப்பட்டார். எனினும் அவரால் ஒரு போட்டியில் கூட விளையாட முடியவில்லை. தமிழக கிரிக்கெட் சங்கமும் நடராஜனுக்கு தேவையான முழு ஆதரவையும் வழங்கி வருகிறது. நடராஜனை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஒரு சிறந்த மனிதர். எனினும் நடராஜன் தற்போது டெஸ்ட் கிரிக்கெட் வடிவ போட்டிகளில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று நான் கூற மாட்டேன்.
அவர் முதலில் தமிழக ரஞ்சி அணிக்காக முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தொடங்கட்டும். அப்போது நடராஜனை தேர்வு செய்ய வேண்டும் என்று உறுதியாக கூறுவேன் என அஸ்வின் தெரிவித்துள்ளார். இந்தியா அணிக்காக சிறப்பாக பந்து வீசிய நடராஜன் 2021 ஆஸ்திரேலிய தொடருக்குப்பின் முழங்கால் பிரச்சனையால் நீண்ட நாட்கள் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு கடந்த 3 வருடங்களாக நடராஜன் எந்தவித முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவில்லை.

