பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் 2025 ஆம் வருடத்தின் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. குரூப் பி பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்தை வீழ்த்தி தங்களது அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது.
இந்தத் தோல்வியின் மூலம் இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து வெளியேறி கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்திருக்கிறது. நாளை நடைபெறும் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி குரூப் பி பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறும் அணியை முடிவு செய்யும் போட்டியாக அமைந்திருக்கிறது.
2025 ஆம் வருடத்தின் சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்குவதற்கு முன்பு ஆஸ்திரேலிய அணியிலிருந்து முக்கிய வீரர்கள் காயம் காரணமாகவும், சொந்த காரணங்களுக்காகவும் விலகினர். இது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. எனினும் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி தொடர் போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றிருக்கிறது. ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான கேப்டன் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஹெசல்வுட் ஆகியோர் அணியில் இடம்பெறாத நிலையிலும் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு தங்களது அணிக்கு வெற்றியை பெற்று தந்துள்ளனர்.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து திடீரென விலகியதற்கான காரணத்தை ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் பகிர்ந்திருக்கிறார். ஆஸ்திரேலியாவின் வில்லோ டாக் என்ற நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் கலந்து கொண்ட அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து விலகியதற்கான காரணத்தை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பேசியிருக்கும் ஸ்டார்க் உடல் தகுதி மற்றும் சொந்த காரணங்கள் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து இறுதிக்கட்டத்தில் திடீரென விலகியதாக கூறியிருக்கிறார்.
இதுகுறித்து பேசிய அவர், கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி கட்டத்தில் விலகியதாக தெரிவித்தார். இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின் போதே தனக்கு கணுக்காலில் வீக்கம் மற்றும் வலி இருந்ததாக தெரிவித்திருக்கிறார். அது தீவிரமடைந்ததை தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து விலகியதாக கூறியிருக்கிறார். மேலும் வர இருக்கும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரை கருத்தில் கொண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து திடீரென விலகியதாக அவர் தெரிவித்தார்.
.
சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து விலகுவதற்கு சில சொந்த காரணங்கள் இருந்தாலும் உடல் தகுதியின் அடிப்படையிலேயே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி மிகவும் முக்கியமான ஒன்று என குறிப்பிட்ட அவர் அந்தப் போட்டியில் பங்கேற்பதற்கு வர இருக்கின்ற 2 மாதங்களில் தீவிர பயிற்சியில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடரின் ஆஸ்திரேலிய அணியிலிருந்து காயம் காரணமாக கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் ஹெசல்வுட் ஆகியோர் விலகிய நிலையில் மிட்செல் ஸ்டார்க்கும் சொந்த காரணங்களால் விலகியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனது பேட்டியின் மூலம் சர்ச்சைகளுக்கு மிட்செல் ஸ்டார்க் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

