ஆசியக் கோப்பையின் சூப்பர் ஃபோர் சுற்றின் மூன்றாவது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நாளை மோத இருக்கின்றன. இந்த இரு அணிகளும் ஏற்கனவே மோதிய போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்நிலையில் கிரிக்கெட் உலகமே இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் நாளைய போட்டியை ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது.
முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்தியாவின் டாப் ஆர்டர் வீரர்களை விரைவில் ஆட்டம் இழக்க செய்தனர். ஒரு கட்டத்தில் 66 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்த இந்தியா இசான் கிசான் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் சிறப்பான ஆட்டத்தால் 266 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியின் 10 விக்கெட்களையும் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்கள் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது ஷாகின் அப்ரிதி 4 விக்கெட்டுகளையும் ஹாரிஸ் ரவுப் மற்றும் நசிம் ஷா தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்நிலையில் நாளை நடைபெற இருக்கும் போட்டி குறித்தும் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் குறித்தும் இன்றைய பத்திரிகையாளர் நிகழ்வில் பகிர்ந்து கொண்டார் இந்தியாவின் இளம் துவக்க வீரர் சுப்மன் கில்.
இது குறித்து பேசிய கில்” பாகிஸ்தான் அணியிடம் தரமான பந்துவீச்சு இருக்கிறது. அவர்களின் பந்துவீச்சை சந்தித்து விளையாடுவது ஒரு சவாலான காரியம். மேலும் பாகிஸ்தான் அணியுடன் அடிக்கடி விளையாடாததும் இந்த சவாலுக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது ஒரு அணியுடன் அடிக்கடி விளையாடும் போது அந்த வீரர்களின் பலம் மற்றும் பலவீனங்கள் பற்றி நமக்கு நன்றாக தெரியும்” எனக் கூறினார்.
மேலும் இது தொடர்பாக தொடர்ந்து பேசிய அவர் ” இதுபோன்ற தரமான பந்துவீச்சாளர்களை அடிக்கடி சந்தித்து விளையாடாமல் இருப்பதும் பின்னடைவிற்கு ஒரு காரணம் என தெரிவித்தார். மேலும் தனது ஐபிஎல் போட்டிக்கு பிறகான ஃபார்ம் குறித்து பேசி அவர் இதற்கு டெக்னிக்களாக எந்த மாற்றமும் செய்ய வேண்டியதில்லை தரமான பந்துவீச்சு விக்கெட்டுகளை வீழ்த்தும். பந்து வீச்சாளர்களும் திறமையானவர்கள் அவர்களும் விக்கெட்டை வீழ்த்தத்தான் பந்து வீசுகிறார்கள். அதனால் சில நேரங்களில் அப்படித்தான் நடக்கும் என தெரிவித்தார்.
பாபர் அசாம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர்” பாபர் அசாம் ஒரு வேர்ல்ட் கிளாஸ் வீரர். உலகின் சிறந்த வீரர்கள் அனைவரையும் நாங்கள் பாலோ செய்கிறோம். அதுபோலவே பாபர் அசாமையும் பாலோ செய்கிறோம் என தெரிவித்தார். போட்டிக்கான திட்டங்கள் அனைத்தும் தயாராக இருக்கின்றன என்றும் அதன்படி இந்தியா சிறப்பாக செயல்படும் எனவும் தெரிவித்தார் .
மேலும் ஷாகின் அப்ரிதி மற்றும் நசீம் ஷா ஆகிய இருவருக்கிடையே உள்ள வித்தியாசம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர்” ஷாஹீன் அப்ரிதி பெரும்பாலும் பந்தை ஸ்விங் செய்கிறார். நசீம் ஷா நன்றாக வேகமாக வீசுவதோடு நல்ல லென்தில் பந்துகளை வீசி ரன் எடுப்பதற்கு சிரமம் கொடுக்கிறார் என தெரிவித்தார்.

